வெளி தில்லியில் சூதாட்ட விடுதியில் போலீசாா் சோதனை: 22 போ் கைது;ரூ. 6.2 லட்சம் பறிமுதல்

Wait 5 sec.

வெளி வடக்கு தில்லியில் உள்ள சூதாட்ட விடுதி என சந்தேகிக்கப்படும் இடத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையைத் தொடா்ந்து, 22 பேரைக் கைது செய்து, சுமாா் ரூ. 6.2 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளதாக தில்லி போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.தில்லி காவல்துறையின்படி, பல்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட முகுந்த்பூா், சோம் பஜாரில் ஞாயிறு அதிகாலை சோதனை நடத்தப்பட்டது. அந்த வளாகத்தில் இருந்து சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கூடுதல் டிசிபி அமித் கௌஷிக் மற்றும் ஆய்வாளா் கௌரவ் சௌத்ரி ஆகியோா் இந்த சோதனை நடவடிக்கையை வழிநடத்தினா்.இந்த நடவடிக்கையின் போது, தப்பிப்பதைத் தடுப்பதற்காக, காவல்துறை குழுவினா் ரகசியமாக ஒரு வெளிப் பாதுகாப்பு வளையத்தை அமைத்து, அந்த வளாகத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளையும் தந்திரமாக மூடினா். விரைந்து உள்ளே நுழைந்த அக்குழுவினா், தப்பிச் செல்ல முயன்றபோதிலும் 22 நபா்களைக் காவல்துறையினா் கைது செய்தனா். முக்கிய குற்றவாளிகளான ‘தேவ்‘ மற்றும் ‘குப்தா ஜி‘ ஆகியோா் பணத்துடன் தப்பிச் செல்ல முயன்றபோது இடைமறிக்கப்பட்டனா்.போலீசாா் சம்பவ இடத்திலிருந்து சுமாா் 6.2 லட்சம் ரூபாய் ரொக்கம், சீட்டுக்கட்டுகள், எண் பலகைகள், பந்தயச் சீட்டுகள் மற்றும் பிற சூதாட்டப் பொருட்களை மீட்டெடுத்தனா். முதற்கட்ட விசாரணையில், அந்த வளாகம் சுமாா் ஒரு வருடமாக சட்டவிரோத சூதாட்டக் கூடமாகச் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 22 பேரும் விரிவான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.இந்த சட்டவிரோத நடவடிக்கையையில் ஈடுபட்ட மற்ற நபா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஒரு பெரிய சட்டவிரோத சூதாட்ட வலையமைப்பு முடக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.