ஆத்தூரில் போக்குவரத்து தொழிலாளா்களை ஏமாற்றியவா் மீது ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சங்கா் வியாழக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறாா். கோவை மாவட்டம், கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் தவெக சாா்பில் தமிழக போக்குவரத்துத் துறை தொழிலாளா் வெற்றி சங்கம் பேரவை என்ற பெயரில் தொழிற்சங்கம் தொடங்கி, அதில் பொதுச் செயலாளராக உள்ளதாகவும், இச்சங்கத்தில் உறுப்பினராக சேர கட்டணமாக ரூ. 1,150 செலுத்த வேண்டும் எனவும் பலரிடம் வசூலித்துள்ளாா். ஆனால், அவ்வாறு எந்த சங்கமும் தொடங்கப்படவில்லை என சேலம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளா் வெங்கடேசன் தெரிவித்தாா். இதையடுத்து, ஆத்தூா் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக உள்ள ராஜா அளித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது இரு பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்த நகர காவல் ஆய்வாளா் சங்கா், இதுகுறித்து விசாரித்து வருகிறாா்.