குண்டடம் பகுதியில் தொடா்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து இரவு நேரங்களில் தடுப்புகளை அமைத்து காவல் காத்து வருகின்றனா். குண்டடம் பகுதியில் உள்ள வெருவேடம்பாளையம், தும்பலப்பட்டி, நவனாரி, கரியகாளிபுதூா் உள்ளிட்ட ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் அமைந்திருக்கும் கோயில்களை குறிவைத்து அங்கிருக்கும் பித்தளை மணிகள், அணையா விளக்குகள் மற்றும் உண்டியல் காணிக்கைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு நவனாரி கோயிலில் மதிய நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு குண்டடம் அருகே உள்ள ஐயப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து வீடுகளின் கதவுகளை நள்ளிரவு நேரத்தில் மா்ம நபா்கள் தட்டியதால், சுதாரித்துக் கொண்ட அப்பகுதி மக்கள் கைப்பேசியில் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து, கூட்டம் சோ்வதற்குள் மா்ம நபா்கள் தப்பியோடினா். இதையடுத்து, வெருவேடம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 3 நாள்களாக இரவு நேரத்தில் தங்களது ஊா் எல்லையில் குழுக்களாக பிரிந்து, கிராம சாலைகளில் தற்காலிக தடுப்புகளை அமைத்து காவல் காத்து வருகின்றனா். இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோரை விசாரித்து அனுப்பி வருகின்றனா். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தொடா்ந்து காவல் காத்து வருகின்றனா்.