துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சௌதி அரேபியாவுக்குப் பாதுகாப்பைத் தராது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. சௌதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் துருக்கி அதிபர் ரெசப் தயிப் எர்டோகன் ஆகியோர் மூன்று நாடுகளுக்கும் இடையேயான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இன்று (ஆக. 7) கையெழுத்திட்டனர். இதன்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்ற 2 நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் எனவும், மூன்று நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் ராணுவ பலத்தை அதிகரிக்க இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான சௌதி அரேபியாவின் பாதுகாப்பு ஒப்பந்தம் அவர்களுக்குப் பாதுகாப்பைத் தராது என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெசாயி கூறியுள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,“அமெரிக்காவுக்குப் பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்ச ஆதரவு அளித்தும் பாதுகாப்பு கிடைக்காதது போல, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான வெறும் காகித ஒப்பந்தமும் அவர்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சௌதி உணர வேண்டும்.மற்றவர்களிடம் பாதுகாப்பிற்கு கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படாத வகையில், உங்கள் கொள்கைகளைச் சீரமைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, துருக்கி, சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுடன் ஈரான் கடல் மற்றும் நிலம் வழியாக எல்லைகளைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.Iran has stated that the defense agreement with Turkey and Pakistan will not provide security to Saudi Arabia.