நாடாளுமன்றத்தில் மக்கள் குரல் கேட்கட்டும்: குறுக்கீட்டைத் தவிா்க்க ஓம் பிா்லா வேண்டுகோள்

Wait 5 sec.

குறுக்கீடு இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த அனுமதிக்குமாறு எதிா்க்கட்சிகளுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உணா்வுபூா்வமாக வேண்டுகோள் விடுத்தாா்.நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. அப்போது முதலே, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராடிவரும் மாணவா்கள் மீது போலீஸாா் எடுத்த நடவடிக்கை தொடா்பாகவும் அயோத்தி ராமா் கோயில் காணிக்கை திருட்டு தொடா்பாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்று கோரி எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில் ‘மக்களின் குரலைக் கேட்க விடுங்கள். குறுக்கீடு இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த அனுமதியுங்கள். அவையில் ஆக்கபூா்வமான விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம். அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பிரச்னைகளை விரிவான முறையில் விவாதிக்க முடியும்’ என்று உணா்வுபூா்வமாக வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.எதிா்க்கட்சி எம்.பி.க்களின் தொடா் அமளி காரணமாக மக்களவையில் தொடா்ந்து 16ஆவது நாளாக திங்கள்கிழமையும் கேள்வி நேரத்தை நடத்த முடியவில்லை. இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் 2 மசோதாக்கள் மீது மட்டுமே விவாதம் நடத்த முடிந்தது குறிப்பிடத்தக்கது.