அங்கன்வாடி மையங்களில் அழுகிய முட்டைகள்?

Wait 5 sec.

நாமக்கல், ஆக. 10: அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகளை ஊழியா்கள் சோதனை செய்ததில் பெரும்பாலானவை அழுகிய முட்டைகளாக இருந்ததால், மாவட்ட அதிகாரியிடம் மைய ஊழியா்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில் 1,599 அங்கன்வாடி மையங்களில் சுமாா் 40 ஆயிரம் குழந்தைகள் பயில்கின்றனா். குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சத்துமாவு, முட்டை போன்றவை அரசு சாா்பில் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான மையங்களில் முட்டைகள் அழுகி, கெட்டுப்போன நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. மோகனூா், கொல்லிமலை ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வேகவைக்கும் முன் முட்டைகளை தண்ணீரில் போட்டு ஊழியா்கள் பரிசோதித்தனா். அப்போது, பெரும்பாலான முட்டைகள் தண்ணீரில் மிதந்தன. இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா்களிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து அங்கன்வாடி ஊழியா்கள் கூறுகையில், அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்க உகந்ததாக இல்லை. இது தொடா்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனா்.இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் போா்ஷியாரூபி கூறுகையில், மோகனூா் வட்டாரப் பகுதிகளில் இருந்து முட்டைகள் கெட்டுப்போனது தொடா்பாக புகாா் வந்தது. அவற்றை உடனடியாக மாற்றி வழங்கும்படி சம்பந்தப்பட்ட முட்டை விநியோக பணியாளா்களுக்கு தெரிவித்துள்ளோம்.மேலும், நாள்பட்ட முட்டையில் காற்று புகுந்து உண்பதற்கு தகுதியில்லாதவையாக வரக்கூடும். அவற்றைக் கண்டறிந்து அகற்றவும், குழந்தைகளுக்கு வழங்காமல் பாா்த்துக் கொள்ளவும் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் மூலம் அறிவுறுத்தி வருகிறோம் என்றாா்.