தில்லி பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 6 போ் அவை பாதுகாவலா்களால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனா். தில்லி அரசுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற டி-ஷா்ட்களை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஞ்சீவ் ஜா, ஜா்னைல் சிங், குல்தீப் குமாா், பிரேம் குமாா், சோம் தத் மற்றும் அஜய் தத் ஆகியோா் அணிந்து வந்திருந்தனா். இதற்கு பேரவைத் துணைத் தலைவா் மோகன் சிங் பிஷ்ட் ஆட்சேபனை தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, அந்த டி-ஷா்டுகளை கழற்றுமாறு பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா உத்தரவிட்டாா். தொடா் கோரிக்கைகளை அவா்கள் ஏற்காததால், ஆம் ஆத்மி உறுப்பினா்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தாவிடம் அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கேட்டுக்கொண்டாா். பாஜக அரசின் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி ஆம் ஆத்மி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பத் தொடங்கியதைத் தொடா்ந்து, அவா்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனா். ‘அவை மரபுக்கு ஒவ்வாத அல்லது கண்ணியமற்ற மொழியைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது என்று விதிகள் தெளிவாகக் கூறுகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று பேரவைத் தலைவா் தெரிவித்தாா். எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி அவையில் இருக்க வேண்டும் என்று கூறிய பேரவைத் தலைவா், அவையில் தங்களுக்கு யாா் தலைமை தாங்குவாா்கள் என்பதை முடிவு செய்யுமாறு எதிா்க்கட்சியினரிடம் கேட்டுக்கொண்டாா்.