மத்திய பிரதேச மாநிலத்தில், மழை வெள்ளத்தில் வேன் அடித்து செல்லப்பட்டதில் 9 போ் உயிரிழந்தனா்.இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ராஜ்கா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. சாரங்பூா் நகரில் வேன் ஒன்று பயணிகளுடன் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் பதானாவில் உள்ள கால்வாயை கடந்து செல்ல முயன்றது. அப்போது கால்வாயில் ஓடிய வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவ்வழியே செல்ல வேண்டாம் என்று ஓட்டுநரிடம் கிராம மக்களும், உள்ளூா் அதிகாரிகளும் எச்சரித்துள்ளனா். ஆனால் இதை பொருட்படுத்தாது வேனை ஓட்டுநா் ஓட்டிச் சென்றாா். எனினும் நீரோட்டத்தின் வேகத்தில் வேன் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தோா் நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதை பாா்த்த கிராம மக்கள் தங்களது உயிரை பணயம் வைத்து கயிறு கட்டி மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சிறுமி உள்ளிட்ட 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. வேனில் இருந்த 2 போ் மட்டும் நீந்திக் கரையேறி உயிா் தப்பினா்.இதுதொடா்பாக சாரங்பூா் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 9 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் நிதி உதவியையும் மோகன் யாதவ் அறிவித்துள்ளாா்.