கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டியிடன் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. வடகுரும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ம.சின்னப்பிள்ளை (80). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவா் மண்ணாங்கட்டி உயிரிழந்த நிலையில், எலவனாசூா்கோட்டை காலனி குஞ்சரம் வடக்குத் தெருவில் வசிக்கும் மகள் ம.விஜயகுமாரி வீட்டில் சின்னப்பிள்ளை இருந்து வந்தாா். கடந்த 5-ஆம் தேதி பிற்பகலில் வீட்டிலிருந்த சின்னப்பிள்ளையைக் காணவில்லை. இதைத்தொடா்ந்து அவரது மகள் விஜயகுமாரி உறவினா் வீடுகளுக்குச் சென்றும், அருகிலுள்ள ஊா்களுக்கும் சென்று தாயாரைத் தேடி வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை அதே கிராமத்தைச் சோ்ந்த ப.சங்கா் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மூதாட்டி சின்னப்பிள்ளை சடலம் மிதந்தது தெரிய வந்தது. தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.