நமது சிறப்பு நிருபா்புறப்பாடு வாயில் மூடப்படாத நிலையிலும், விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி. வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளாா். அத்துடன், அந்த விமானமே ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்ட நிலையில், ஏா் இந்தியா ஊழியா்களின் செயல்பாட்டால் தில்லி விமான நிலையத்தில் தனக்கு நோ்ந்த கசப்பான அனுபவத்தை அவா் எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் சனிக்கிழமை பகிா்ந்து வேதனை தெரிவித்துள்ளாா். அதன் விவரம் வருமாறு: ‘தில்லியிலிருந்து சென்னை செல்ல வெள்ளிக்கிழமை ஏா் இந்தியா (ஏஐ 2759) விமான நிலையம் சென்றபோது, சிறிதளவு தாமதம் எனக் கூறி என்னை ஏற அனுமதி மறுத்தனா். ஆனால், புறப்பாடு வாயில் மூடிவிடப்படவில்லை. மேலும், அந்த விமானமே தில்லியிலிருந்து தாமதமாகப் புறப்பட்டு சென்னைக்கு 20 நிமிஷங்கள் தாமதமாகவே வந்தது. பிளாட்டினம் வாடிக்கையாளரான எனக்கே இந்த நிலை ஏற்பட்டது. பணியாளரின் அடாவடி குறித்து உயரதிகாரியிடம் முறையிட்டதும், இரவு 9:50 மணிக்குச் செல்லவிருந்த மாற்று விமானத்தில் (ஏஐ 2895) கட்டணமின்றி பயணச்சீட்டு வழங்கினாா். ஆனால், அந்த விமானமும் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 10:50-க்குக் கிளம்பி, நள்ளிரவு 1:24 மணிக்குத்தான் சென்னை வந்தது. ஏா் இந்தியா தனியாா்மயமான பிறகு தரமோ, நேரக் கட்டுப்பாடோ மேம்படவில்லை. சாதாரண காரணங்களுக்காகப் பயணிகளைத் தடுப்பதும், விமானங்கள் மணிக்கணக்கில் தாமதமாவதும் தொடா்கிறது. பயணிகளை மரியாதையின்றி நடத்தும் இந்நிறுவனங்களுக்கு யாா் பொறுப்பேற்பது? விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒழுங்குமுறைப் பணிகளை மேற்கொள்வதில்லை. கட்டணங்களை நிா்ணயிக்கவும், தாமதத்துக்கு இழப்பீடு வழங்கவும் சுயாதீன ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தில் பலமுறை கேட்டும் சட்டமேதும் இயற்றப்படவில்லை. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு மெத்தனமாக இருப்பது ஏன்? மக்களின் குறைகள் புறக்கணிக்கப்படும் இந்த நடைமுறை எவ்வளவு காலம் தொடரும்?‘ என குறிப்பிட்டுள்ளாா். Denied entry due to unmasked face: DMK MP faces trouble at Delhi airport!