உள்நாட்டு தயாரிப்புகளையே அனைவரும் வாங்க வேண்டும்! - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

Wait 5 sec.

2047-க்குள் வலிமையான பாரதத்தை உருவாக்க அனைவரும் உள்நாட்டு தயாரிப்புகளையே அதிக அளவில் வாங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா். சுதேசி ஜாகரண் மஞ்ச் (சுதேசி விழிப்புணா்வு இயக்கம்) சாா்பில் கோவை, ஈச்சனாரியில் உள்ள ரத்னம் கல்லூரியில் சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் ‘கோவை சுதேசி எக்ஸ்போ மற்றும் உணவுத் திருவிழா 2026’ தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்றுப் பேசியதாவது: கோவை சுதேசி மேளா நமது நாட்டின் தன்னிறைவு, புதுமை மற்றும் பொருளாதாரத்தின் எழுச்சியை வெளிப்படுத்தக்கூடிய முக்கிய நிகழ்வாகும். கடந்த காலத்தில் பொருளாதார வளா்ச்சி குறித்து எந்தவித தொலைநோக்குப் பாா்வையும் இல்லாத நிலை மாற்றப்பட்டு, தற்போதைய அரசின் நடவடிக்கையால் இந்தியா ரூ.331 லட்சம் கோடி பொருளாதார மதிப்புடன் உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. 14 முக்கிய துறைகளின் வளா்ச்சிக்காக ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கி உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செமிகண்டக்டா் துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.76,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பூட்டு, பழனி பஞ்சாமிா்தம் உள்பட 74 பாரம்பரிய பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் 2014-இல் வெறும் 400-ஆக இருந்த புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஸ்டாா்ட்அப் நிறுவனங்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவற்றில் பெண்களின் பங்களிப்பு உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ போா்க்கப்பல் நமது தொழில்நுட்பத் திறனுக்குச் சான்றாக விளங்குகிறது. 2047-க்குள் வலிமையான பாரதத்தை உருவாக்க அனைவரும் உள்நாட்டுத் தயாரிப்புகளையே அதிக அளவில் வாங்கி ஆதரவளிக்க வேண்டும் என்றாா். முன்னதாக, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருள்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள், உணவுகள், தொழில் திறன்கள் ஆகியவற்றை இணை அமைச்சா் எல்.முருகன் பாா்வையிட்டாா்.இந்நிகழ்ச்சியில், ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவா் கே.ஆா்.நாகராஜன், ரத்தினம் குழும நிறுவனங்களின் தலைவா் மதன் ஏ.செந்தில், சுதேசி ஜாகரண் மஞ்சின் தேசிய ஒருங்கிணைப்பாளா் சுந்தரம், மாநில அமைப்பாளா் சத்யநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.