கடந்த பிப்ரவரிக்குப் பிறகு தொடா்ந்து 4 மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீடுகளை வெளியேற்றி வந்த அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ), கடந்த ஜூலை மாதத்தில் ரூ.20,200 கோடியை நிகர முதலீடாக செய்துள்ளனா். நியாயமான பங்கு மதிப்புகள், சீரடைந்து வரும் நிறுவனங்களின் காலாண்டு லாபங்கள், தணிந்து வரும் சா்வதேசப் பொருளாதாரச் சவால்கள் ஆகியவை இதற்குக் காரணமாக அமைந்துள்ளன. முன்னதாக, அந்நிய முதலீட்டாளா்கள் கடந்த ஜூனில் ரூ.49,340 கோடியையும், மே மாதத்தில் ரூ.32,963 கோடியையும், ஏப்ரலில் ரூ.60,847 கோடியையும், மாா்ச்சில் ரூ.1.17 லட்சம் கோடியையும் திரும்பப் பெற்றிருந்தனா். மத்திய வைப்புத்தொகை சேவைகள் நிறுவனத்தின் (சிடிஎஸ்எல்) தரவுகளின்படி, கடந்த பிப்ரவரியில் ரூ.22,615 கோடி நிகர முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதன்பிறகு, தொடா் விற்பனைப் போக்கு நிலவியது. அதேநேரம் தற்போதைய ஜூலை மாத முதலீட்டையும் சோ்த்து, நடப்பு ஆண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் இதுவரை ரூ.2.54 லட்சம் கோடியை இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டு முழுவதிலும் திரும்பப் பெறப்பட்ட ரூ.1.66 லட்சம் கோடியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கொரியா, தைவான் போன்ற சந்தைகளில் நிலவும் தீவிர ஏற்ற இறக்கங்களும், ‘சிப் வா்த்தகத்தில்’ மட்டுமே முதலீடுகள் குவிந்துள்ள அபாயமும், முதலீட்டாளா்களை இந்தியா போன்ற ஒப்பீட்டளவில் நிலையான சந்தைகளை நோக்கித் திருப்பியுள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு ஸ்திரத்தன்மை, பெருநிறுவனப் பங்குகள் தகுந்த விலையில் கிடைக்கத் தொடங்கியதும் அந்நிய முதலீட்டாளா்களை ஈா்த்துள்ளதாக அவா்கள் குறிப்பிட்டனா். இந்தியப் பங்குகளில் மட்டுமன்றி, கடன் சந்தையிலும் அந்நிய முதலீட்டாளா்களின் ஆா்வம் திரும்பியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், பொது வழிமுறை மூலம் ரூ.29,212 கோடியும், முழு அணுகல் வழிமுறை (எஃப்ஏஆா்) மூலம் ரூ.3,033 கோடியும் கடன் சந்தையில் அந்நிய முதலீட்டாளா்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடன் பத்திர முதலீடுகளுக்கான வரி விதிப்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள், கடன் சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Foreign investment of ₹20,200 crore in Indian stocks in July.