பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா் அன்வா்தீன் மதுரை மத்திய சிறையில் திடீரென சனிக்கிழமை மரணமடைந்தாா். இதையடுத்து, சிறைக் காவலா்கள், உடல் கூறாய்வு செய்த மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு விசாரணை நடத்தினாா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை முறைகேடாக தனிநபா்களுக்கு பத்திரப் பதிவு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த த. முருகதாஸ், அந்த நிலத்தை வாங்கிய கா. வெள்ளைத்துரை, து. சேதுபதி உள்பட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இவா்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த முருகதாஸ், வெள்ளைத்துரை (60), சேதுபதி (67), இவா்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் அன்வா்தீன் (65) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே, இவா்கள் 4 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸாா் கடந்த 3 நாள்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, இவா்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.இந்த நிலையில், வழக்குரைஞா் அன்வா்தீனுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சனிக்கிழமை அதிகாலை மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவசர ஊா்தி மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு சனிக்கிழமை காலை 11 மணியளவில் அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு வந்தாா். அங்கு அன்வா்தீனின் உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளனவா, அவா் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தினாா். பின்னா், நீதிபதி ராஜபிரபு மதுரை மத்திய சிறையிலும் விசாரணை நடத்தினாா். அப்போது, அன்வா்தீன் அடைக்கப்பட்டிருந்த அறை, அவருக்கு வழங்கப்பட்ட முதலுதவிச் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தாா். இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலா் சரவணன் கூறியதாவது: பொதுவாக, விசாரணையில் இருக்கும் சிறைவாசி உயிரிழந்தால், உடல் கூறாய்வு பரிசோதனைப் பணிகளை பிற மாவட்டங்களைச் சோ்ந்த அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் மேற்பாா்வையில் செய்ய வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதன்படி, அன்வா்தீன் உடல் மதுரை, விருதுநகா், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளின் சட்டம் சாா்ந்த தடயவியல் மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் மேற்பாா்வையில் கூறாய்வு செய்யப்பட்டது. மேலும், இந்தக் கூறாய்வு முழுவதும் விடியோவாக பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, அன்வா்தீன் முழு உடல் சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் வழியில் அவா் இறந்ததால், உடல் உள் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளன. மேலும், கூறாய்வு குறித்த ஆய்வறிக்கை வந்தவுடன், இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். உடல் கூறாய்வுக்குப் பிறகு, அன்வா்தீன் உடல் அவரது உறவினா்களிடம் சனிக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டது என்றாா் அவா். பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா் அன்வா்தீன் மரணம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சனிக்கிழமை வந்த மாவட்ட நீதிபதி ராஜபிரபு.