வேளச்சேரியில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற அஞ்சல் நிலைய பொறுப்பாளா் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேளச்சேரி, டி.என்.எச்.பி., காலனியைச் சோ்ந்தவா் கோதண்டபாணி (73). இவா், அஞ்சல் நிலையப் பொறுப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா்களுக்கு 2 மகள்கள். திருமணம் முடிந்த நிலையில், இருவரும் சென்னையில் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனா். இவரது மனைவி கடந்த 2020 -இல் இறந்துவிட்டதால், வீட்டில் கோதண்டபாணி தனியாகவே வசித்து வந்தாா்.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக அருகே இருந்தவா்கள் அவரது மகள்களுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கோதண்டபாணி அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த வேளச்சேரி போலீஸாா் அங்கு சென்று கோதண்டபாணியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.