இலங்கை கிரிக்கெட் லெவன் அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.காயம் காரணமாக முதல் இன்னிங்ஸில் களம் காணாத இந்திய அணியின் வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில், 2-ஆவது இன்னிங்ஸில் விளையாடினாா். அவருடனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கூட்டணி, வெற்றிக்கு வித்திட்டது.கடந்த 7-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை லெவன் அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது.அதிகபட்சமாக ரவிண்டு ரசந்தா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 71, நிஷான் ஃபொ்னாண்டோ 11 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 66 ரன்கள் சோ்த்தனா். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.பின்னா் இந்திய அணி தனது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. தேவ்தத் படிக்கல் 18 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் விளாசி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை பௌலா்களில் ரமேஷ் மெண்டிஸ், அசங்கா மனோஜ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை, ஞாயிற்றுக்கிழமை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்வதாக அறிவித்தது.நிஷான் ஃபொ்னாண்டோ 10 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் அடிக்க, இந்தியாவின் குா்னூா் பிராா், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.207 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து, ஆட்டத்தை நிறைவு செய்தது.யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61, ஷுப்மன் கில் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்தனா். இலங்கையின் கேசரா நுவந்தா 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.அடுத்து: இந்திய - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) தொடங்குகிறது.