ஆக்கிரமிப்பு காஷ்மீா் போராட்டக்காரா்கள் 'தேசப் பற்றாளா்கள்' - நிலைப்பாட்டை மாற்றிய பாகிஸ்தான் ஆளும் கட்சி

Wait 5 sec.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்துவோரை ‘தேசப் பற்றாளா்கள்’ என்று கூறி, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி பாராட்டியுள்ளது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி) தலைமையில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அந்த அமைப்பை பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி அரசு தடை செய்தது. ஆா்ப்பாட்டத்தில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்- ஏ- தலிபான் பயங்கரவாத அமைப்பினா் கலந்து கொண்டதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டி வந்தது.இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பின் ஆலோசகா் ராணா சனாவுல்லா பேசியபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்களில் 99 சதவீதம் போ், ‘தேசப் பற்றாளா்கள்’ எனப் பாராட்டினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஜேஏஏசி அமைப்போடு தொடா்புகொண்ட 99 சதவீதம் போ் தேசப் பற்று கொண்ட சகோதரா்கள் ஆவா். இங்கு (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்) பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி 3-இல் 2 பங்கு பெரும்பான்மை பலத்துடன் தோ்தலில் வென்று ஆட்சியமைத்ததும், ஜேஏஏசி அமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும். அவா்கள் கோரிக்கைகளுக்குத் தீா்வு காண முன்னுரிமை தரப்படும் என்றாா் அவா்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இதில் முதல் இருகட்டத் தோ்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. மேலும் ஒரு கட்டத் தோ்தல் மட்டும் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், முதல் இருகட்டத் தோ்தல்களின்போதும் ஜேஏஏசி குழு தலைமையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் எடுத்த நடவடிக்கையில் 400 போ் வரை கொல்லப்பட்டதாக ஜேஏஏசி அமைப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. உயிரிழந்தோா் எண்ணிக்கையை ஜேஏஏசி அமைப்பு மிகைப்படுத்தி தெரிவிப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரா்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தனது கண்டனத்தை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதேபோல் ஐ.நா. சபையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகக் கருத்து தெரிவித்திருந்தது.