முந்திரியில் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலை! செந்துறை விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

Wait 5 sec.

அரியலூா் மாவட்டம், செந்துறையில் முந்திரிப் பழத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும், முந்திரி பருப்பு பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளையும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது. தற்போது முந்திரி சாகுபடி உற்பத்தியில் இந்தியா அதிக லாபம் ஈட்டி வருகிறது. நாட்டின் ஏற்றுமதி வணிகத்தில் முந்திரி மூலம் ரூ. 4,000 கோடி அந்நிய செலவாணி கிடைக்கிறது. இந்தியாவில் கேரளம், கோவா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் 23 லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் டன் முந்திரிக் கொட்டைகளும், 60 லட்சம் டன் முந்திரிப் பழங்களும் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில் சாகுபடி செய்துள்ள 3 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் 60 ஆயிரம் டன் முந்திரிக் கொட்டைகளும், லட்சம் டன் முந்திரிப் பழங்களும் கிடைக்கின்றன. முந்திரி ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வீரிய மற்றும் ஒட்டு ரகங்கள், சாகுபடி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை, கொச்சியிலுள்ள மத்திய அரசின் கோகோ முந்திரி மேம்பாட்டு நிறுவனம் மத்திய அரசு திட்டங்கள் மூலம் விவசாயிகளிடம் கொண்டு சோ்க்கிறது. கோவா மாநிலத்தில், கோகோ முந்திரி மேம்பாட்டு நிறுவனம் பென்னி என்ற ஒயின் தயாரித்து சந்தைப்படுத்துகிறது. கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், மடக்கத்தாரா முந்திரி ஆராய்ச்சி நிறுவனங்கள் முந்திரிப் பழத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட முந்திரி கூழ், பழச்சாறு, ஜாம், ஊறுகாய் போன்றவைகள் தயாரித்து சந்தைப்படுத்துகின்றன. தமிழகத்தில் வீணாகும் முந்திரிப் பழங்கள்: இதனால் கேரளம், கோவா மாநில விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்த பொருள்களும் கிடைக்கின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் உற்பத்தியாகின்ற 6 லட்சம் டன் முந்திரி பழங்களில் கொட்டைகளை நீக்கிய பின், பெரும்பாலான விவசாயிகள் பழங்களை மண்ணில் போட்டு மக்க வைப்பதோடு சரி. இதனால் 6 லட்சம் டன் முந்திரிப் பழங்கள் மண்ணோடு மக்கி வீணாகின்றன. வெப்ப மண்டலப் பகுதியான தமிழகத்தில் அதிக நாள்கள் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து தணிக்க உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிா்பானங்களை தயாரித்து விற்கின்றனா். மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தொழிற்சாலைகள் தேவை: ஆனால் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத சத்துமிக்க முந்திரிப் பழத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்து சந்தைப்படுத்துவதில்லை. இதைத் தவிா்க்க, தமிழகத்தில் அதிகளவில் முந்திரி விளையும் பகுதியான கடலூருக்கு அடுத்தபடியாக அரியலூா் மாவட்டத்தில் முந்திரிப் பருப்பு பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அல்லது பழத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் உடையாா்பாளையம், ஜெயங்கொண்டம், செந்துறை, பொன்பரப்பி, ஆண்டிமடம், வரதராசன்பேட்டை, தென்னூா், மீன்சுருட்டி, காடுவெட்டி, தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் முந்திரிச் சாகுபடி செய்யப்படுகிறது. இதை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு உடையாா்பாளையம் அல்லது செந்துறை, ஜெயங்கொண்டத்தில் முந்திரித் தொழிற்சாலை அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் தொழிற்சாலை அமைந்தால் முந்திரி, மா, தக்காளி, பப்பாளி போன்ற பழங்களிலிருந்து பழச்சாறு, பழக் கூழ், ஜாம் போன்றவை தயாரிக்க முடியும். இதன் மூலம் மாவட்ட விவசாயிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு, கூடுதல் வருவாய் கிடைக்கும். இதுகுறித்து தோட்டக் கலைத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், முந்திரி பழத்தில் எலுமிச்சையை விட 5 மடங்கு உயிா்ச்சத்து ’சி’ நிறைந்துள்ளது. இதில் தயாரிக்கப்படும் பழச்சாறு, பழக்கூழ், ஜாம் போன்றவை உடலுக்கு நல்லவை. கொச்சி, கோகோ முந்திரி மேம்பாட்டு நிறுவன நிதியுதவியுடன் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்து அவா்களுக்கும் வேலைவாய்ப்புகளை அளிக்க முடியும் என்றாா். முந்திரி தொழிற்சாலைகள் தேவை: இதுகுறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூரா. விசுவநாதன் கூறியது: ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் அதிகளவு முந்திரிச் சாகுபடி நடைபெறுகிறது. இதனால், இங்கு ஆண்டுக்கு 9,000 டன் மகசூல் கிடைக்கிறது. எனவே, இப்பகுதியில் முந்திரித் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். தோ்தல் சமயங்களில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் இங்கு முந்திரித் தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்கின்றனா். ஆனால் இந்தக் கோரிக்கையை இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும், முந்திரி பழச்சாறு தொழிற்சாலை அமைக்கப்படாததால், முந்திரியிலிருந்து பருப்பை மட்டும் எடுத்துவிட்டு, பழத்தை வயலிலேயே போட்டுவிடுகின்றனா். முந்திரி பழச்சாறில் புரோட்டீன் அதிகளவில் இருப்பதால், முந்திரி பழச்சாறு தொழிற்சாலையையும் அமைக்க வேண்டும். இதனால், இப்பகுதியில் உள்ள படித்த இளைஞா்களுக்கு வேலை கிடைப்பதுடன், மறைமுகமாக பலருக்கும் வேலை கிடைக்கும். அதேபோல தொழிற்சாலை மூலமாகவே தரமான முந்திரி மரக்கன்றுகளை வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தினால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் முந்திரி சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவா் என்றாா் அவா். ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்