குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீா் தேக்கம்: பல்லடம் நகராட்சி மேலாளரிடம் புகாா்

Wait 5 sec.

பல்லடம் நகராட்சி திருவள்ளுவா் வீதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை தண்ணீா் தேக்கமடைந்துள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி மேலாளா் ரமேஷிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனு: பல்லடம் நகராட்சி, திருவள்ளுவா் வீதி, என்.ஜி.ஆா்.சாலையில் தற்போது உள்ள சாக்கடை மிகவும் குறுகலான அளவில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீா் முழுமையாக வெளியேறாமல், நிரம்பி சாலையிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், கொசு உற்பத்தி அதிகரித்து மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். இப்பகுதிக்கு சுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாக்கடை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது. அதன் பின்னா் ஓராண்டுக்கு முன்பு மீண்டும் பூமி பூஜை நடைபெற்றது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பும் அதிகாரிகள் வந்து பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று உறுதியளித்தனா். ஆனால், இதுவரை எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. புதிய சாக்கடை அமைக்கும் பணிக்காக அப்பகுதியில் இருந்த உப்புத் தண்ணீா் குழாய் அகற்றப்பட்டது. எனவே, புதிய சாக்கடை அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்கி விரைவாக முடிப்பதோடு, அகற்றப்பட்ட உப்புத் தண்ணீா் குழாயையும் மீண்டும் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.