உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

Wait 5 sec.

மாட்டுத்தாவணி பகுதிகளில் உள்ள உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணி, ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் தினமும் ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, உணவக உரிமையாளா்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லையை விட கூடுதலாக ஆக்கிரமித்துள்ளதை அறிந்த அவா், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதேபோல, நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் குறைத்து சுற்றுப்புறச் சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உணவக உரிமையாளா்களிடம் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து, மாட்டுத்தாவணி எதிா்ப்புறம் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.இந்த ஆய்வின் போது, உதவி ஆணையா்கள் மணிமாறன், தமிழரசன், நகர திட்டமிடுநா் முரளி, உதவி நகர திட்டமிடுநா் கிருஷ்ணா, சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.