ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவின் முதல் நாளான வியாழக்கிழமை இரவு ஆண்டாள், ரெங்கமன்னாா் 16 வண்டி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதார உத்ஸவமான ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான வியாழக்கிழமை இரவு ஆண்டாள், ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் 16 வண்டி சப்பரத்தில் எழுந்தருளினா். இரவு 11.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதன்பிறகு திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக சப்பரத்தை இழுத்தனா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை ஆண்டாள் தங்க பல்லக்கிலும், ரெங்கமன்னாா் தந்த பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.