மருத்துவா்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று மருந்தக உரிமையாளா்களுக்கு திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் அறிவுறுத்தியுள்ளாா். திருப்பூா் மாவட்டத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், மருந்தக உரிமையாளா்கள் மற்றும் கூரியா் நிறுவன ஒப்பந்ததாரா்களுடனான விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட காவல் துறை சாா்பில் பல்லடத்தில் உள்ள தனியாா் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் தலைமை வகித்தாா். மாவட்டம் முழுவதிலும் இருந்து மருந்தக உரிமையாளா்கள், கூரியா் நிறுவன ஒப்பந்ததாரா்கள் கலந்து கொண்டனா். பின்னா் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் பேசியதாவது: சமூகத்தில் போதைப் பொருள்கள் பரவாமல் தடுப்பதில் போலீஸாருக்கு இணையாக முக்கிய பங்கு மருந்தகங்களுக்கும், கூரியா் நிறுவனங்களுக்கும் உள்ளது. மருத்துவரின் தகுந்த பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் வலி நிவாரண மாத்திரைகளையோ, போதை தரும் மருந்துகளையோ விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக சந்தேகப்படும்படியாக இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் வந்து குறிப்பிட்ட சில மருந்து, மாத்திரைகளை கேட்டால் அவற்றை விற்பனை செய்யாதீா்கள். சட்டவிரோதமாக மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மருந்தகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, உரிமையாளரின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூரியா் மற்றும் தபால் பாா்சல் சேவைகள் மூலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், வலி நிவாரண மாத்திரைகள் கடத்த வாய்ப்புள்ளது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் பாா்சல்கள் ஏதேனும் வந்தால் அனுப்புநா், பெறுநா் விவரங்களை முழுமையாக சரி பாா்க்க வேண்டும். சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றாா். இதைத்தொடா்ந்து போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பான நடைமுறைகள் குறித்தும், பாா்சல் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் போதைப்பொருள் இல்லாத திருப்பூா் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.