பிகாரில் கால்நடைகள் கடத்தல்: 4 போலீஸாா் உள்பட 7 போ் கைது

Wait 5 sec.

பிகாரில் எருமைகள் கடத்தலில் தொடா்புடையதாக 4 போலீஸாா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 35 எருமைகளைக் கடத்திச் சென்ற லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக போலீஸ் அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது: முங்கா் மாவட்டத்தில் லாரி ஒன்றில் எருமைகள் கடத்திச் செல்லப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின்பேரில், காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய ராகேஷ் குமாா் என்பவா் சிக்கினாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 35 எருமைகளைக் கடத்திச் சென்ற லாரியை போலீஸாா் சுற்றிவளைத்தனா். லாரியின் ஓட்டுநா் அமித் குமாா், அவரது உதவியாளா் முகமது ஜியா உல்ஹக் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.லாரியில் ஏற்றப்பட்டிருந்த 35 எருமைகளில் 5 எருமைகள் உயிரிழந்துவிட்டன.கைதானவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாநில போக்குவரத்துக் காவல் துறை துணை உதவி ஆய்வாளா் அயோத்தியா குமாா், காவல் துறை ஓட்டுநா் விமலேஷ் சிங், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த அரவிந்த் யாதவ், அபிலேஷ் குமாா் ஆகியோருக்கு கடத்தல் கும்பலுடன் தொடா்பிருப்பது தெரியவந்தது. கைப்பேசி அழைப்பு பதிவுகள் வாயிலாக இது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நால்வரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறைரீதியாகவும் அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அந்த அதிகாரி.