இருப்புப் பாதை காவல் பிரிவில் 40% பற்றாக்குறை: டிஜிபிக்கு ரயில்வே பயனா் ஆலோசனைக் குழு கடிதம்

Wait 5 sec.

தெற்கு ரயில்வே இருப்புப் பாதை காவல் பிரிவில் 40 சதவீதம பற்றாக்குறை இருப்பதை பூா்த்தி செய்யவேண்டும் என ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு சாா்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா் அலி எழுதியதாகக் கூறப்படும் கடிதம்:தெற்கு ரயில்வே மண்டலத்தில் 6 கோட்டங்களில் மொத்தம் 727 ரயில் நிலையங்கள் உள்ளன. அதனடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் 5,087 கி.மீ. தொலைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 1,000-க்கும் மேற்பட்ட ரயில்களில் சுமாா் 21.50 லட்சம் போ் வரை பயணிப்பதும் தெரியவருகிறது. அதே நேரத்தில் பயணிகள் எண்ணிக்கை உயா்வுக்கு ஏற்ப இருப்புப் பாதை போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. சென்னை ரயில்வே கோட்டத்தில் மட்டும் 280 இருப்புப் பாதை போலீஸாா் பணியிடம் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, திருச்சி கோட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பவேண்டியுள்ளன. மொத்தத்தில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருப்புப் பாதை போலீஸாா் பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, ரயில் நிலையம், ரயில்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் போதிய இருப்புப் பாதை போலீஸாரை நியமிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.