உலக யானைகள் தினத்தன்று தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தாய் யானை மற்றும் குட்டி யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.கோவை மாவட்டம், தமிழக - கேரள எல்லையை ஒட்டியுள்ள கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் வாளையார் சாவடிப்பாரா புதுப்பதி வனப்பகுதியில் நள்ளிரவு 11.45 மணியளவில் 4 யானைகள் கொண்ட கூட்டம் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது பலமாக மோதியது.இந்த விபத்தில் சிக்கிய தாய் யானை மற்றும் குட்டி யானை ஆகிய இரண்டும் ரயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாளையார் வனத்துறையினர் மற்றும் பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணியளவில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் யானைகளின் உடல்கள் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டு, பழுதான ரயில் என்ஜின் சரிசெய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.விபத்து நிகழ்ந்த இடம் தமிழக எல்லையிலிருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தொலைவில் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. மதுக்கரை வனச்சரகத்தின் 'பி' டிராக்கைக் கடந்து பாலத்தின் வழியே வளைவான பாதையில் ரயில் வந்ததால், லோகோ பைலட்டால் யானைகளை முன்கூட்டியே பார்த்து ரயிலைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டதா? என்பது குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழக வனப்பகுதியில் மதுக்கரை எல்லைக்கு உட்பட்ட இரண்டு ரயில் தடங்களிலும் ரூ.16 கோடி செலவில் செய்யறிவு (ஏஐ) கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் யானைகள் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், எல்லை தாண்டிய கேரளப் பகுதியில் இத்தகைய ஏ.ஐ கேமரா கண்காணிப்பு இல்லாதது குறித்து வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த 2021-ஆம் ஆண்டிலும் இதே மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, தற்போது விபத்து நடந்த இடத்திற்கு அருகே கருவுற்ற பெண் யானை உள்பட 3 யானைகள் உயிரிழந்தன. இந்த விபத்தின் காரணமாக தமிழகம் - கேரளம் இடையேயான முக்கிய ரயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. 'பி' டிராக்கில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவ்வழியாக வந்த ரயில்கள் 'ஏ' டிராக் வழியாக மாற்றி இயக்கப்பட்டன. உலக யானைகள் தினத்தன்று தாய் மற்றும் குட்டி யானை ரயில் மோதி பலியான சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.On World Elephant Day, a mother elephant and her calf tragically died on the spot after being struck by the Mangalore Express train along the Tamil Nadu-Kerala border.