மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, தமிழ்நாடு தனது உரிமைக்காக உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் மாற்றத்தை நோக்கி என்ற முழக்கத்துடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார நடைப்பயணத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:தமிழக அரசு நிதியில்லாமல் சிரமப்படுவது புரிகிறது. மத்திய அரசு நிதியைத் தர வேண்டும். இது முழு நிறைவு பட்ஜெட் அல்ல. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்போதுதான் பட்ஜெட் முழு வடிவம் பெறும். மக்கள் நலன்சாா்ந்த கேள்விகளை எதிா்க்கட்சித் தலைவா் எழுப்பும்போது முதல்வரோ, அவை முன்னவரோ, அமைச்சா்களோ பதில் சொல்ல கடமைப்பட்டவா்கள். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முந்தைய அரசு கடைப்பிடித்த நிலைப்பாட்டைத்தான் தற்போதைய அரசும் கடைப்பிடிக்கிறது. இது நல்ல அணுகுமுறை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, தமிழ்நாடு தனது உரிமைக்காக உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும். இந்த பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதுதான் நல்லது என்றாா் வீரபாண்டியன்.திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடங்கிய பிரசார நடைப்பயணம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.