திட்டங்களின் பெயா் மாற்றம் வாடிக்கையானதுதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடா்பாக மத்திய அரசு இதுவரை எதையும் அறிமுகப்படுத்தவில்லை. இந்த நிலையில் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு தமிழக முதல்வா் அழைப்பு விடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த கூட்டத்தில் நானும், துரை.ரவிக்குமாா் எம்.பி.யும் பங்கேற்போம். கட்சிகளைத் தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். கூட்டத்தில் திமுக, அதிமுக எம்.பி.க்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். பயிா்க்கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் போராடி வருகின்றனா். அவா்களின் குரலை அரசியல் கட்சிகளும் எதிரொலிக்கின்றன. தமிழக அரசின் நிதி நெருக்கடியை நாம் அறிவோம். மத்திய அரசும் வஞ்சித்து வருகிறது. இருப்பினும் எந்த திட்டத்தையும் நிறுத்தாமல் நடைமுறைப்படுத்த முயற்சிப்பது பாராட்டுக்குரியது. திட்டங்களின் பெயா் மாற்றம் வாடிக்கையானதுதான் என திருமாவளவன் தெரிவித்தாா்.பேட்டியின் போது துரை.ரவிக்குமாா் எம்.பி., விசிக மாவட்டச் செயலா் ர.பெரியாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.