துஷாா் ரஹேஜா சதம்: திருப்பூருக்கு முதல் வெற்றி

Wait 5 sec.

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சோ்க்க, திருப்பூா் 18 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் சதமடித்த முதல் வீரராக, திருப்பூரின் துஷாா் ரஹேஜா பெருமை பெற்று, ஆட்டநாயகன் விருது பெற்றாா். முன்னதாக டாஸ் வென்ற திருப்பூா், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆஷிக் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 98 ரன்கள் விளாசி, சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாா். கேப்டன் நாராயண் ஜெகதீசன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 27 ரன்களுக்கு விடைபெற்றாா். வசீம் அகமது 3 பவுண்டரிகளுடன் 16, தினேஷ் ராஜ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12, மோஹன பிரசாத் 1, அபிஷேக் தன்வா் 0, ராம் அரவிந்த் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில் அஷ்வந்த் வல்தப்பா 3 சிக்ஸா்களுடன் 28, எம். சிலம்பரசன் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். திருப்பூா் பந்துவீச்சாளா்களில் ஆா். சிலம்பரசன், மோகன் பிரசாத் ஆகியோா் தலா 2, டி.நடராஜன், சாய் கிஷோா், இசக்கிமுத்து ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். அடுத்து, 206 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய திருப்பூா் அணியில் அமித் சாத்விக் 4 பவுண்டரிகளுடன் 19, கேப்டன் சாய் கிஷோா் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். துஷாா் ரஹேஜா - பிரதோஷ் ரஞ்சன் பால் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. சதம் கடந்த ரஹேஜா 52 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 102 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். முடிவில் பிரதோஷ் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 73 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருக்க, முகமது அணி 1 ரன்னுடன் துணை நின்றாா். சேப்பாக் பௌலா்களில் விக்னேஷ் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். நெல்லை வெற்றி: இதனிடையே 6-ஆவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. முதலில் திண்டுக்கல் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் சோ்க்க, நெல்லை 17.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் சோ்த்து வென்றது.