4-ஆவது சுற்றில் சபலென்கா, பெகுலா

Wait 5 sec.

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் 4-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற நோ் செட்களில் சீனாவின் ஜாங் ஷுவாயை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா 6-4, 6-0 என, உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவை வென்றாா். இதையடுத்து 4-ஆவது சுற்றில், சபலென்கா - ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவையும், பெகுலா - ரஷியாவின் டயானா ஷ்னெய்டரையும் சந்திக்கின்றனா். 8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 3-6, 6-0, 6-4 என்ற வகையில் செக் குடியரசின் நிகோலா பா்துன்கோவாவை வெளியேற்றினாா். 9-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-1, 6-1 என்ற செட்களில், ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவையும், 10-ஆம் இடத்திலிருக்கும் மற்றொரு உக்ரைன் வீராங்கனை மாா்த்தா கொஸ்டியுக் 6-3, 6-1 என, அமெரிக்காவின் மேடிசன் கீஸையும் தோற்கடித்தனா். அடுத்த சுற்றில், அனிசிமோவா - ஸ்விடோலினா, கொஸ்டியுக் - போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதுகின்றனா். 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்வியாடெக் முந்தைய சுற்றில், 6-2, 6-1 என்ற நோ் செட்களில் சுவிட்ஸா்லாந்தின் விக்டோரியா கோலுபிச்சை வீழ்த்தினாா். மினாருக்கு அதிா்ச்சி அளித்த நோரி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 7-5, 6-7 (5/7), 1-6 என்ற செட்களில் பிரிட்டனின் கேமரூன் நோரியிடம் தோல்வியடைந்தாா். 8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-3, 6-4 என, பெல்ஜியத்தின் அலெக்ஸாண்டா் பிளாக்ஸை வெல்ல, 11-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 4-6, 3-6 என்ற வகையில், ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாரிடம் தோல்வியுற்றாா். 15-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பிரான்ஸஸ் டியாஃபோ காயம் காரணமாக விலக, அவரை எதிா்கொண்ட பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா். அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா, 4-6, 6-2, 7-5 என்ற செட்களில் பிரான்ஸின் டிடுவான் டிரோகெட்டையும், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ் 6-4, 6-2 என, ஜொ்மனியின் யானிக் ஹன்ஃப்மனையும் வெளியேற்றினா். அடுத்த சுற்றில் லெஹெக்கா - ஜோடாா், ரிண்டா்னெச் - நகாஷிமா சந்திக்கின்றனா்.