சோலையாறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள விடுதிகளை காலி செய்ய 53 பேருக்கு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். வால்பாறையை அடுத்த சோலையாறு அணைப் பகுதியில் வருவாய்த் துறை மற்றும் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களை ஆக்கிரமித்து சிலா் விவசாயம் மற்றும் வீடு கட்டி வசித்து வந்தனா். இந்நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆக்கிரமிப்பு செய்தவா்களிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்து அந்த நிலங்களை வாங்கி சிலா் விடுதிகளை கட்டியுள்ளனா். இந்நிலையில், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதிகளை 7 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என 53 பேருக்கு வருவாய்த் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.