கைத்தறிப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கரூா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் வலியுறுத்தினாா். 12-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கரூரில் கைத்தறித் துறை சாா்பில் நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரூா் வெங்கமேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் தலைமை வகித்து பேசுகையில், கைத்தறி நெசவாளா்கள் தங்கள் உழைப்பால் நாட்டின் பொருளாதாரத்துக்கும், கலாசாரத்துக்கும் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றனா். இன்றைய இளைஞா்களும் கைத்தறிப் பொருள்களை விரும்பி பயன்படுத்த வேண்டும். கைத்தறி ஆடைகளை அணிவது என்பது, ஒரு உடைத் தோ்வு மட்டுமல்ல; அது நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு சமூகப் பொறுப்பாகும். ‘கைத்தறி அணிவோம் - நெசவாளரை வாழ வைத்திடுவோம்‘ என்ற எண்ணத்தை அனைவரும் மனதில் கொண்டு, கைத்தறி பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, முத்ரா திட்டத்தின் கீழ் 25 பேருக்கு ரூ. 17.50 லட்சம் மதிப்பில் கடனுதவி, 23 பேருக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.16.26 லட்சம் மதிப்பீட்டில் அனுமதி ஆணைகள் என மொத்தம் 48 நெசவாளா்களுக்கு ரூ. 33.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து நெசவாளா்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமையும் அவா் பாா்வையிட்டாா்.இந்நிகழ்வில், கைத்தறித் துறை உதவி இயக்குநா் ஜெ. சுகன்யா மற்றும் நெசவாளா்கள் திரளாக பங்கேற்றனா்.