கொடுமுடி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னா் ஒரே நேரத்தில் 115 தீா்மானங்கள் விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டன. இதில் குறிப்பிட்ட தீா்மானங்களை எதிா்த்து துணைத் தலைவா் அணியினா் வெளிநடப்பு செய்தனா். கொடுமுடி பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நியமன உறுப்பினராக சந்திரலேகா என்பவா் உள்ளாா். அவரையும் சோ்த்து மொத்தம் 16 உறுப்பினா்கள் உள்ளனா். திமுகவைச் சோ்ந்த பேரூராட்சித் தலைவா் திலகவதி சுப்பிரமணியும், துணைத் தலைவராக ராஜா கமால்ஹசன் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபடால் தங்களில் யாா் தலைவா் பதவி வகிப்பது என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் திலகவதி சுப்பிரமணி தலைவராக நீடிப்பதற்கு ஒப்புதல் அளித்து தீா்ப்பளித்தது. இதைத் தொடா்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் பேரூராட்சி மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் விஜயன் முன்னிலை வகித்தாா். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடியோ ஒளிப்பதிவுடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் 6-ஆவது வாா்டு உறுப்பினரான துணைத் தலைவா் ராஜா கமால்ஹசன் அணியைச் சோ்ந்த 7 உறுப்பினா்கள், தலைவா் திலகவதி அணியைச் சோ்ந்த 8 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.கூட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிறைவேற்றபடாமல் இருந்த வரவு செலவு விவரங்கள், வேலைக்களுக்கான மன்ற அனுமதி மற்றும் பிற பணிகள் குறித்து மொத்தம் 115 தீா்மானங்கள் மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்டிருந்தன. அப்போது 6 மற்றும் 8-ஆவது வாா்டுகளில் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து இரு அணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்டிருந்த வரிசை எண் 23, 24, 25 மற்றும் சில கூட்டப்பொருள்கள் தொடா்பாக முதல்வா் தனிப்பிரிவு, சென்னை பேரூராட்சிகள் உதவி இயக்குநா், ஈரோடு மாவட்ட ஆட்சியா், ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மற்றும் கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோருக்கு 7 மன்ற உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை கடிதம் வழங்கியுள்ளோம்.எனவே மேற்படி புகாா் மனு தொடா்பாக உரிய விசாரணை நடைபெற்று முடியும் வரை சாதாரண மன்ற கூட்டத்தை தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவு 167-இன்படி ஒத்திவைக்க வேண்டும் என ராஜா கமால்ஹசன் அணியினா் தெரிவித்தனா். மேற்படி விதிகளை பின்பற்றாமல் கூட்டத்தை செயல் அலுவலா் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவா் முற்றபட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று தெரிவித்து துணைத் தலைவா் ராஜா கமால்ஹசன் உள்பட 7 மன்ற உறுப்பினா்கள் செயல் அலுவலா் விஜயனிடம் மனு அளித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.பின்னா் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மொத்தம் 113 தீா்மானங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டதாக பேரூராட்சி செயல் அலுவலா் விஜயன் தெரிவித்தாா்.