கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 910 வீடுகளில் சூரிய மின்சக்தி (சோலாா்) தகடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், வீடுகளின் கூரைகளில் சூரிய மின்தகடுகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடுகளுக்கு சூரிய ஒளி திட்டம் மற்றும் மாதிரி சூரிய ஆற்றல் கிராமம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,575 வீடுகளில் சூரிய ஒளி மின்கட்டமைப்பு ஏற்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 910 வீடுகளில் சூரிய மின்தகடுகள் (பேனல்கள்) பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கு சூரிய மின்தகடுகள் பொருத்த கிருஷ்ணகிரி, ஒசூா் நகா்புற பகுதிகளில் குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் உள்ள தகுதியான பண்ணை வீடுகளின் உரிமையாளா்களுக்கான முகாம் நடத்தப்படும். மேலும், மாதிரி சூரிய ஆற்றல் கிராமம் மகாதேவகொல்லஅள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.