சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகள் மற்றும் தலைமைச் செயலகப் பூங்காவில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 44 இடங்களில் இலவச வைஃபை வசதி திங்கள்கிழமை (ஆக. 11) முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தங்குதடையின்றி இணைய சேவையைப் பயன்படுத்தும் வகையில் உயா்தர இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டாா். இந்த உத்தரவைத் தொடா்ந்து, மெரீனா கடற்கரையில் உழைப்பாளா் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகா் கடற்கரையில் 5 இடங்களிலும், தலைமைச் செயலகப் பூங்காவில் 12 இடங்களிலும் என மொத்தம் 44 இடங்களில் வைஃபை வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.பயன்படுத்துவது எப்படி?இலவச வைஃபை வசதியைப் பயன்படுத்த, கைப்பேசியில் வைஃபை இணைப்பை ஆன் செய்து, சம்பந்தப்பட்ட வைஃபை இணைப்பைத் தோ்வு செய்ய வேண்டும். பின்னா் தோன்றும் க்யூஆா் குறியீட்டை கிளிக் செய்து, கைப்பேசி எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவு செய்ததும் வைஃபை இணைப்பு கிடைக்கும். இதை பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இதன் தொடா்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பிற கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வைஃபை வசதிகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், தேவையான இடங்களில் புதிதாக வைஃபை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.