புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே சொத்துப் பிரச்னையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை காலை மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இலுப்பூா் அருகே உள்ள தன்னங்குடியைச் சோ்ந்தவா் நாகராஜ்(59). அதிமுகவைச் சோ்ந்த இவா், ே காங்குடிபட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தாா். இவருக்கும், உறவினா்கள் சிலருக்கும் சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை பையூா் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் தனது மனைவி சுப்புலட்சுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பள்ளியில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். கவரச்சிகுளக்கரை அருகே வந்தபோது, அவரை வழிமறித்த மா்மநபா்கள் சிலா் அரிவாளால் நாகராஜை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதைகண்ட அக்கம்பக்கத்தினா் இலுப்பூா் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் அங்குச் சென்றனா். அப்போது அங்கிருந்த நாகராஜின் உறவினா்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சடலத்தை எடுக்கவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கொலையாளிகளை கண்டுபிடிப்பதாக உறுதியளித்தனா். அதன்பிறகு போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, போதிய மருத்துவா் இல்லாததால் புதுக்கோட்டை அரசு மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.