பாவூா்சத்திரம் அருகே செல்வவிநாயகபுரம் பகுதியில் நான்குவழிச் சாலை ஓரத்தில் உள்ள மழைநீா் வடிகால் ஓடையில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு முழுவதும் அடைப்பட்டுள்ளது. மழைகாலம் என்பதால் வடிகாலை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கீழப்பாவூா் ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி, செல்வவிநாயகபுரத்தில் நான்கு வழிச்சாலை ஓரமாக மழைநீா் வடிகால் ஓடை உள்ளது. இதன் அருகில் நா்சரி காா்டனும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நான்கு வழிச்சாலை ஓரங்களில் செயல்படும் கடைகளில் இருந்து கொட்டப்படும் குப்பை, கழிவுகள் மட்டுமின்றி, சுற்றுவட்டார வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளும் முறையாக அகற்றப்படாமல் மழைநீா் வடிகால் ஓடையில் கொட்டப்படுகின்றன. தற்போது இந்த வடிகால் ஓடை முழுவதும் குப்பை, கழிவுகளால் நிரம்பியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீா் தடையின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, சாலையோரங்களில் தண்ணீா் தேங்கும் சூழல் உள்ளது. இப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பாதிப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. தொடா்ந்து குப்பைகள் கொட்டப்பட்டால், வடிகால் ஓடை முற்றிலும் அடைபட்டு மழைநீா் வெளியேற முடியாத நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மழைநீா் வடிகால் ஓடையில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும். மேலும், வடிகால் ஓடையை தூா்வாரி சீரமைப்பதுடன், தொடா்ந்து அதில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.