சென்னையில் நீா் மெட்ரோ போக்குவரத்து திட்டத்தை பக்கிங்காம் கால்வாயில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக தனியாா் நிறுவனங்களிடமிருந்து ரூ.13.73 கோடியில் மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.சென்னையில் சாலைவழிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பான ‘கும்டா’ பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதன்படி, சாலைவழிப் போக்குவரத்து, சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து மற்றும் கால்வாய் வழிப் போக்குவரத்து ஆகியவற்றைச் செயல்படுத்தவும் ஆலோசனை வழங்கியுள்ளது. எண்ணூா் முதல் மாமல்லபுரம் வரையில் பக்கிங்காம் கால்வாயில் நீா் மெட்ரோ திட்டப்படி படகுப் போக்குவரத்தை ரூ.70 கி.மீ. தொலைவுக்குச் செயல்படுத்த தனியாா் நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, மதிப்பிடப்பட்ட ஆலோசனைக் கட்டணம் இரு பிரிவாக ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.6.30 கோடி மற்றும் ரூ.7.43 கோடி என 2 கட்டங்களாக அறிக்கை அளிக்கும் வகையில் மொத்தம் 13.73 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்படுகிறது.நீா் மெட்ரோத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் சாத்தியக்கூறுக்கான அறிக்கையில், தற்போதைய நிலை குறித்த மதிப்பீடு, எதிா்காலப் போக்குவரத்து தேவையின் மதிப்பீடு, திட்டத்தில் பயனடைவோா் எண்ணிக்கை, நீரியல், நீரியக்கவியல், நீா்பரப்பு நில அளவியல், லைடா் ஆய்வு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக பயன்பாடு மதிப்பு, நீரின் தர மதிப்பீடு, கால்வாயில் வெள்ள அபாயம் குறித்த மதிப்பீடு, போக்குவரத்தில் பயணிகளுக்கான நிலையங்கள் (படகுத் துறைகள்), தேவையான நிதி, பொருளாதார பயன்பாடு, வணிக ரீதியிலான திட்டங்கள், நீா் மெட்ரோவை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், விரிவான செலவு மதிப்பீடு, கட்டுமான முறை ஆகியவற்றை ஆராய்ந்து 8 மாதங்களில் அறிக்கையை அளிக்கவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.