கங்கைகொண்டானில் மகளிருக்கான தங்கும் விடுதி திறப்பு

Wait 5 sec.

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மகளிருக்கான தங்கும் விடுதி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ.39.89 கோடியில் கட்டப்பட்ட 870 படுக்கைகள் வசதிகள் கொண்ட உழைக்கும் மகளிா் தங்கும் விடுதி கட்டடத்தை, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் காணொலி மூலம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாட்டின்போது திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, சிப்காட் வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். சிப்காட் வருவாய் அலுவலா் சுகன்யா, சிப்காட் திட்ட அலுவலா் காா்த்திகேயன், சிப்காட் இளநிலை பொறியாளா் முருகன், கங்கைகொண்டான் ஊராட்சித் தலைவா் கவிதா உள்பட பலா் கலந்துகொண்டனா். சிறப்பம்சங்கள்: கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளாகத்தில் 2.07 ஏக்கா் பரப்பளவில் ஒதுக்கப்பட்ட இடத்தில், 1,24,446.82 சதுர அடியில், தரைத்தளத்துடன் கூடிய மூன்று தளங்களுடன் இத்தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. 6 நபா்கள் தங்கும் வகையில் 131 அறைகளில் 786 படுக்கைகளும், 12 நபா்கள் தங்கும் வகையில் 7 அறைகளில் 84 படுக்கைகளுமாக 870 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. உணவுக்கூடம், பணியாளா் அறை, வரவேற்பறை, சேமிப்பறை, சலவை மற்றும் துணி உலா்த்தும் அறை, பாா்வையாளா் அறை, மருத்துவ அறை உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடிநீா் மற்றும் அனைத்து தளங்களிலும் வைபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.