பெருவெடிப்பு என்கிற பிக்பேங் (Big Bang) தியரி பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த அறிவியல் உண்மையை நறுக்கென நாலே வரிகளில் சொல்ல முடியுமா? முடியும். கவிஞர்களால் முடியும். அதிலும் கவியரசர் கண்ணதாசனுக்கு இது கைவந்த கலை.கவியரசர் கண்ணதாசன் எழுதிய ஒரு கவிதை - ‘கதிர்வெடித்துப் பிழம்புவிழ, கடல் குதித்துச் சூடாற்ற, / முதுமைமிகு நிலப்பரப்பில் முதற்பிறப்பு தோன்றிவிட’இந்தக் கவிதையில் இரண்டே வரிகளில், பிக்பேங் என்ற பெருவெடிப்பு, நெபுலா, புவிக்கோளின் உருவாக்கம் எல்லாம் வந்துவிட்டது. ‘நதி வருமுன் மணல்தரும் நலம் வளர்ந்த தமிழணங்கே, பதிமதுரைப் பெருவெளியில் பாண்டியர் கை பார்த்தவளே’ என்ற அடுத்தடுத்த வரிகளில் தமிழ்மொழியின் தொன்மை, சிறப்பு எல்லாவற்றையும் சுருக்கென சொல்லி விட்டார் கவியரசர்.ஆக, அவ்வளவு பெரிய பெருவெடிப்புக் கொள்கையையே, நாலு வரிகளில் நறுக் எனச் சொன்னவர் கண்ணதாசன்.அதுபோல தெர்மோ டைனமிக்ஸ் விதி என்று அறிவியலில் ஒரு விதி உண்டு. ‘வெப்பம் என்பது ஒருவகையான வேலை. வேலை என்பது ஒருவகையான வெப்பம்’ என்பது அதில் முதல் விதி.காலம் என்பது குளிரில் இருந்து வெப்பத்தை நோக்கிப் பாய்கிறது. நேற்று என்பது நாளையை நோக்கி நகர்கிறது.அதுபோல ஒவ்வொன்றும் ஒரு முடிவை நோக்கி ஓடுகிறது. தெர்மோ டைனமிக்சின் இந்த விதியை கவியரசு கண்ணதாசன் தெரிந்து வைத்துக்கொண்டு ஒரு பாட்டு எழுதியிருக்கிறார் பாருங்கள்.அந்த பாடல்தான் - ‘நதி எங்கே போகிறது? கடலைத் தேடி! / நாள் எங்கே போகிறது? இரவைத் தேடி! / நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி! / நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி!‘இருவர் உள்ளம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இணையற்ற பாடல் இது....புரட்சிகளையும் போர்களையும் பற்றி பல கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.1917 ஆம் ஆண்டு நடந்த ரஷியப் புரட்சியை, ‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி, அலறி விழுந்தான் கொடுங்கோலன்’ என்று பாடினார் மகாகவி பாரதியார்.1962 ஆம் ஆண்டு சீனப் போர் நடந்தபோது, ‘சீனாக்காரன் தானே வந்தான் போருக்கு, நம் சிறுத்தைக் கூட்டம் வேறே இங்கே யாருக்கு?’ என்று கலகக் கவிதை ஒன்றை வரைந்தார் பாவேந்தர் பாரதிதாசன். அந்த வரிசையில் பாகிஸ்தான் போரைப் பற்றி கவிதை யாத்தவர் கவியரசு கண்ணதாசன்.எதிரிப்படை இந்தியாவின் வடமேற்கு எல்லையில் ஊடுருவி வந்ததையும், இந்தியப் படை அவர்களை எதிர்கொண்ட விதத்தையும் பற்றி கச்சிதமாக ஒரு கவிதையில் இப்படிப் பதிவு செய்திருப்பார் கவியரசு கண்ணதாசன்.‘சிந்துவிலோர் சேனை சியால்கோட்டில் மறுசேனை!சந்து வழி பகை வந்த ஜம்முவிலோர் சேனை! / வந்து விளையாட வந்த வஞ்சகரை நம் படைகள் / பந்து விளையாடுதல் போல் பாய்ந்து விளையாடுதம்மா!’ இப்படி களம் பாடிய தமிழ்க்கவிஞர்களில் கண்ணதாசனும் ஒருவர்.…பாவேந்தர் பாரதிதாசனிடம், கவியரசர் கண்ணதாசன் சிலகாலம் பழகி வந்தார். அந்த காலகட்டத்தில் திரைப்படப் பாடல் ஒன்றை தீட்டினார் பாரதிதாசன். தொலைவில் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்பவரைப் பார்த்து ஒரு பெண் பாடும் பாடல் அது.‘அதோ பாரடி அவரே என் கணவர்’ என்பது அந்த பாடலின் முதல் வரி.மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் இசையமைப்பாளர் ஒருவர் இந்தப் பாடலுக்கு மெட்டமைத்துக் கொண்டிருந்தார்.பாரதிதாசனுக்கு அந்த டியூன் பிடிக்கவில்லை. கண்ணதாசனைக் கூப்பிட்டார்.‘ஏன்ப்பா கண்ணதாசா. இங்கே வாயேன்’‘வந்தேன்’ என்று பாவேந்தரின் பக்கத்தில் வந்து பவ்வியமாக நின்றார் கவியரசர்.‘அங்கே மெட்டு போடுகிறானே, அவன் இதற்கு முன் மாட்டு வண்டி ஓட்டியிருக்கிறானா?’‘தெரியவில்லை ஐயா’‘முதலில் அவனைப் போய் மாட்டு வண்டி ஓட்டிவிட்டு அப்புறம் வந்து மெட்டுப் போடச் சொல்லு’‘ஏன் ஐயா?’ என்று கேட்டார் கவியரசர்.‘பின்னே என்ன? தொலைவில் வண்டியோட்டி போகிறவனைப் பார்த்து ‘அதோ பாரடி’ என்று நான் பாட்டு எழுதியிருக்கிறேன். அவனோ பக்கத்தில் இருப்பதைப் போல மெட்டு போட்டுக் கொண்டிருக்கிறான்’ என்றார் புரட்சிக் கவிஞர்.விடயம் இதுதான். கூப்பிடு தொலைவில் உள்ள ஒருவனையோ ஒரு பொருளையோ குறிப்பிட்டு, ‘அதோ’ என்று அழைக்கும்போது அந்த தொலைவும், தூரமும் மெட்டில் தெரிய வேண்டும் என்பது பாவேந்தரின் ஆதங்கம்.பாவேந்தரின் இந்த ஆதங்கம் கவியரசர் கண்ணதாசனின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில், ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும், இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்’ என்ற பாடலை கண்ணதாசன் எழுதினார். அந்த பாடலுக்கு இசையமைக்க இருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். அவரிடம், பாவேந்தரின் அந்த ஆதங்கத்தை கவியரசர் சொல்ல, அந்தப் பாடலில், ‘அதோ அந்த பறவை போல’ என்பதில் அ…தோ.. ஒரு நீண்ட தொலைவைக் காட்டிப் பாடலுக்குச் சிறப்பு சேர்த்தது. …குறும்புத்தனம் கவியரசரின் கூடப் பிறந்தது.கவியரசரின் திருமண வயதில் அவரது தாயார் எட்டுப் பெண்களின் புகைப்படங்களைக் காட்டி, ‘என்ன முத்தையா? எந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது?’ என்று கேட்டார். அதற்கு கவியரசர் சொன்ன பதில், ‘எட்டுப் பெண்களையுமே பிடித்திருக்கிறது’ஒருமுறை தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரைப் பற்றி கண்ணதாசன் குறிப்பிடும்போது, ‘அவர் முகத்தில் சூரியனையும், தலையில் சந்திரனையும் கொண்டவர்’ என்றார்.அந்த தலைவர் வேறு யாருமில்லை. அவர் கலைஞர் மு. கருணாநிதி. அவரது தலையில் புதிதாக வழுக்கை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்த நிலையில், கவியரசரின் வர்ணனையை மிகவும் ரசித்தார் அவர்.1978 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., கவியரசர் கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர் என்ற பெருமையை வழங்கிச் சிறப்பித்தபோது அதுபற்றி கவியரசரிடம் கருத்து கேட்கப்பட்டது.‘நான் (அவருக்கு) இன்னா செய்தேன். அவர் (எம்.ஜி.ஆர்) எனக்கு இனியது செய்தார்' என்றார் கவியரசர்.கவியரசர் கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவில் மேலும் மேலும் அவரை நினைவுகூர்வோம். Poet Bharathidasan asked question to poet Kannadasanகண்ணதாசன் அல்ல, கலைமகள் தாசன்!பணத்தைச் சம்பாதிக்க எல்லோருக்கும்தான் தெரிகிறது! எவனுக்குக் கொடுக்கத் தெரிகிறது? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 7