தமிழக அரசுப் பள்ளிகளில் தினமும் இருமுறை கட்டாயமாக தூய்மைப் பணி மேற்கொள்ளும் வகையில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்கவும், தூய்மை செய்வதற்கான பொருள்கள் வாங்கவும் ரூ.86.94 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்யவும், அனைத்து வகுப்பறைகளையும் கூட்டி பெருக்க பணியாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதி, நகராட்சி பொது நிதியில் இருந்து மாத ஊதியமும், கழிப்பறைகளைத் தூய்மை செய்வதற்கான மூலப்பொருள்களை வாங்கிக்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கிடையே பள்ளிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் பணியாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை நிதி விடுவிக்கப்படுகிறது. இதனால், பல அரசுப் பள்ளிகளில் இந்தப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை என பெற்றோா், ஆசிரியா்கள் புகாா் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், அரசுப் பள்ளிகளின் கழிப்பறைகள், வளாகங்களைத் தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலா் பிரசாந்த் வடநரே வெளியிட்ட அரசாணை:தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு, வகுப்பறை மற்றும் பள்ளி வளாக தூய்மைப் பணி பராமரிப்புக்கும், நிகழ் கல்வியாண்டில் (2026-2027) அந்தப் பள்ளிகளுக்கு தூய்மைப் பணிக்கான பொருள்கள் வாங்குவதற்கும் ரூ.86.94 கோடிக்கு ஒப்புதல் வழங்குமாறு ஊரக வளா்ச்சி ஆணையா் அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். அதையேற்று மேற்குறிப்பிட்ட பணிகளுக்காக மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.87.94 கோடிக்கு அரசு ஒப்புதல் வழங்குகிறது. பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் மாணவா்களின் கழிப்பறைகள் அனைத்தும் தினமும் காலை, பிற்பகல் என இருமுறை கட்டாயம் தூய்மை செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.