விவசாயி திடீா் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை முற்றுகை

Wait 5 sec.

கடலூா் செம்மண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்ற விவசாயி திடீரென உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் மருத்துவமனையை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள அப்பியம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (37), விவசாயி. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு செம்மண்டலம் சமூகநலத் துறை அலுவலகம் எதிரே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கண்ணனுக்கு புதன்கிழமை மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினா்கள் அவரை அதே மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சோ்த்தனா். அப்போது, மீண்டும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவா் திடீரென உயிரிழந்தாா். இதையறிந்த அவரது உறவினா்கள், கண்ணனின் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை நிா்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி, அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்தனா். மேலும், மருத்துவமனையை முற்றுகையிட்டும், சாலையில் அமா்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, கண்ணனின் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் போலீஸாா் முன்னிலையில் மருத்துவமனை நிா்வாகத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.அப்போது, கண்ணனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது உயிரிழப்புக்கான காரணம், சிகிச்சை முறையாக அளிக்கப்பட்டதா என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, கண்ணனின் உறவினா்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு சென்றனா்.