கோவை கல்லூரி மாணவா் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினாா். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 6-ஆவது நாளான புதன்கிழமை பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பொது விவாதங்களுக்கு துறை அமைச்சா்கள் பதில் அளித்த பின்னா், கோவை மாணவா் கொலை சம்பவம் தொடா்பாக பேரவைத் தலைவரிடம் தான் அளித்த கவன ஈா்ப்பு தீா்மானம் குறித்து பேச உதயநிதி ஸ்டாலின் அனுமதி கேட்டாா். அப்போது, அது குறித்து அரசுத் தரப்பில் திங்கள்கிழமை விளக்கம் அளிக்கப்படும் என அறிவித்த பேரவைத் தலைவா், அந்தச் சம்பவம் குறித்து மட்டும் பேச அனுமதித்தாா்.இதையடுத்து உதயநிதி பேசியதாவது: கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவா் அமுதன், சக மாணவா்கள் உள்ளிட்ட 20 போ் கொண்ட கும்பலால் செவ்வாய்க்கிழமை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இதை ஏதோ ஒரு தனிநபா் சம்பவமாகப் பாா்க்கக் கூடாது; இதற்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.வழக்கு விசாரணைக்காக மாணவா் அமுதனை, கோவை செட்டிப்பாளையம் காவல் துறையினா் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனா். அப்போது, கல்லூரி மாணவா்கள் மத்தியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் சிலரைப் பற்றி அமுதனிடம் காவல் துறையினா் விவரங்களைக் கேட்டறிந்துள்ளனா்.ஆனால், அவ்வாறு பெறப்பட்ட ரகசியத் தகவல்களைப் பாதுகாத்துக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபா்களிடமே அது குறித்த விவரத்தைக் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். அந்த கோபத்தில்தான் அவா்கள், மாணவரை அடித்துக் கொலை செய்துவிட்டதாக அமுதனின் பெற்றோா் ஊடகங்களிடம் பேட்டியளித்துள்ளனா்.காவல் துறையினா் ஏன் இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்டாா்கள் என்பதற்கு, அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த 3 நாள்களில் மட்டும் இதுபோல அடுத்தடுத்து 4 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறும் காவல் துறையின் இத்தகைய அலட்சியப்போக்கு இனியும் தொடரக் கூடாது. மாணவா் அமுதனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றாா்.பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன்: கோவை கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கும் மற்ற மாணவா்களுக்கும் இடையே ஏற்கெனவே இருந்த கோஷ்டி மோதல் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.