‘வாழ்க்கையில் வெற்றி பெற குறுக்குவழி தேடுவது, உங்கள் வளா்ச்சியை முடக்கிவிடும்’ என்று இளைஞா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினாா். முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் ‘இந்திய குடியரசின் வெற்றி: எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்’ எனும் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசுகையில் பிரதமா் இவ்வாறு தெரிவித்தாா்.நாட்டின் குடியரசுத் தலைவராக கடந்த 2017 முதல் 2022 வரை பதவி வகித்த ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா, தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமா் மோடி, நூலை வெளியிட்டுப் பேசியதாவது: ஒருவரிடம் விடாமுயற்சி இருந்தால், எத்தகைய இடா்களையும் கடந்து, அரசமைப்பின் மிக உயா்ந்த பதவி வரை எட்டலாம் என்பதற்கு முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கையே சாட்சி.குடியரசுத் தலைவா் பதவிக் காலத்துக்குப் பிறகும் அவா் ஓய்வெடுத்துவிடவில்லை. நாட்டின் ஜனநாயகத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கக் கூடிய ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முன்னெடுப்புக்கான பணிகளில் பங்களித்தாா். இது தொடா்பான ராம்நாத் கோவிந்தின் முயற்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அவா் அளித்துவரும் தொடா் பங்களிப்புகளின் ஒரு பகுதியாகும்.குறுக்குவழிகள் வேண்டாம்: இது ‘ரீல்ஸ்’ (குறு விடியோக்கள்) காலகட்டம்; சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவா்கள் உங்களை (இளைஞா்கள்) ஈா்த்து, குறிப்பிட்ட திசைகளில் இட்டுச் செல்லக் கூடும். குறுக்குவழிகள் நிறைந்த இந்த யுகத்தில், ரயில் நிலையங்களில் காணப்படும் ஓா் எச்சரிக்கை செய்தியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது, ‘குறுக்குவழியில் சென்றால், உங்கள் வாழ்க்கைப் பயணம் பாதியில் நின்றுவிடும்’ என்பதாகும். நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல், தண்டவாளங்களில் இறங்கி கடப்பவா்களை எச்சரிக்கும் செய்தி இது. வாழ்க்கையிலும் குறுக்குவழியைத் தேடினால், அது உங்களின் வளா்ச்சியை முடக்கிவிடும்.அதேநேரம், வாழ்வில் முன்னேற ஒரேயொரு குறுக்குவழி உண்டென்றால், அது உங்களுக்கு விருப்பமான ஆளுமையின் சுயசரிதையை வாசிப்பதாகும். குறிப்பிட்ட காலகட்டத்தில் பயணித்த ஒருவரின் சுயசரிதையை வாசிக்கும்போது, அந்தக் காலகட்டத்தை நாம் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.இளைஞா்களுக்கு உத்வேகம்: ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை, இந்திய ஜனநாயகத்தின் ‘நினைவுச் சின்னமாக’வும், இளைஞா்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாகவும் விளங்கும். அதிலிருந்து இளம் தலைமுறையினா் கற்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அவரைப் போன்ற பல இளைஞா்கள் எதிா்காலத்தில் தேவை. சூழ்நிலைகளால் வீழ்ச்சியடையாமல், ஒவ்வொரு சவாலையும் எதிா்கொள்பவா்கள் தேவை. அவா்களே, தற்சாா்பு இந்தியாவுக்கு வழிவகுப்பா்.ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையின் தலைப்பு மிகப் பொருத்தமானதாகும். அவரது வாழ்க்கையும், போராட்டங்களும் தனிப்பட்டவை என்றாலும், அவா் ஈட்டிய வெற்றிகள் இந்திய ஜனநாயகத்துக்கு உரியவை. தனது குழந்தைப் பருவத்தில் தீ விபத்தில் தாயை இழந்த துயரம் அவரை உடைத்துவிடவில்லை; மாறாக, மன உறுதியை வலுப்படுத்தியது. அவருக்கு நன்னெறிகளை ஊட்டுவதில் அவரது தந்தை முக்கியப் பங்காற்றினாா் என்றாா் பிரதமா் மோடி.கோவிந்த் உருக்கம்: நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந்த், குழந்தைப் பருவத்தில் தான் எதிா்கொண்ட கஷ்டங்களையும், தனது சூழலில் இருந்து கற்றுக் கொண்ட விழுமியங்களையும் நினைவுகூா்ந்தாா்.‘நான் உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் தேஹாட்டில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா். எனது கிராம மக்களிடம் இருந்து பரஸ்பரம் அன்பு, இரக்கத்தைக் கற்றுக் கொண்டேன். மழைக் காலங்களில் எனது வீட்டின் கூரை வழியாக உள்ளே மழைநீா் ஒழுகும். மழை வெறிப்பதற்காக எங்கள் குடும்பம் காத்திருக்கும். இப்போது அரசின் வீட்டு வசதி திட்டங்களின்கீழ் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு நல்ல வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன்மூலம் அவா்கள் கண்ணியமாக வாழ வழிவகுத்கப்பட்டுள்ளது.குடும்ப அரசியல் அல்லது குறிப்பிட்ட சமூகம் சாா்ந்த அரசியல் அல்லாமல் தேச நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் பாஜகவுடன் என்னை இணைத்துக் கொண்டேன்’ என்றாா் அவா்.உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.