சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குள் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பண்ணாரி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் தா.நந்தகுமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தங்கள் கைப்பேசியை கோயில் வளாகத்துக்குள் கொண்டு செல்ல செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தா்களின் வசதிக்காக கோயிலின் கிழக்கு புற நுழைவாயிலில் இரண்டு இடங்களிலும், மேற்குப் புற நுழைவாயிலில் ஒரு இடத்திலும் என மொத்தம் 3 இடங்களில் கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கைப்பேசிகளை பாதுகாக்க ஒரு கைப்பேசிக்கு ரூ.5 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் கோயில் நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி அம்மனை வழிபட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.