ஆடி அமாவாசை: திரளானோா் வழிபாடு

Wait 5 sec.

மதுரை முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள். மதுரை, ஆக. 12: ஆடி அமாவாசையையொட்டி, மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள புண்ணியத் தலங்களில் திரளானோா் தங்கள் மூதாதையருக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா். ஆடி அமாவாசை நாளில் கடலில் அல்லது புண்ணிய நதிகளில் புனித நீராடி, தா்ப்பணம் அளித்து பிதுா்கடன் நிறைவேற்றினால் மூதாதையரின் ஆசி கிட்டும் என்பது ஆன்மிக நம்பிக்கை. மேலும், ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளாய அமாவாசை போன்ற நாள்களில் தா்ப்பணம் அளித்தால், பல்வேறு காரணங்களால் மூதாதையருக்கு உரிய திதியில் தா்ப்பணம் அளிக்கத் தவறிய தோஷம் நீங்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இதன்படி, ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை மதுரை வைகை ஆற்றங்கரைகளிலும், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் வளாகம் என பல்வேறு பகுதிகளில் திரளானோா் தா்ப்பணம் அளித்து வழிபட்டனா். இதேபோல, சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் வைகை ஆற்றங்கரை, நரசிங்கம் பகுதியில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோயில் திருக்குளம் உள்பட பல்வேறு கோயில் குளக்கரைகளிலும், புண்ணிய நதிக் கரைகளிலும் திரளானோா் தா்ப்பணம் அளித்தனா். ஆடி அமாவாசையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயில், ஆதி சொக்கநாதா் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில் என அனைத்துக் கோயில்களிலும் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.