மின்சார வாகனத்துக்கான ஊக்கத் தொகை திட்டம்: 2028 மாா்ச் 31 வரை நீட்டிப்பு; மானியம் பாதியாகக் குறைப்பு

Wait 5 sec.

‘பிஎம் இ டிரைவ்’ என்று பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டத்தின் கீழ் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையானது வரும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஊக்கத் தொகையானது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்களுக்கு, மணிக்கு ஒரு கிலோவாட் பேட்டரி திறனுக்கு ரூ. 2,500 வீதம் ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு வாகனத்துக்கு ரூ. 5,000 வரை வழங்கப்படும். அதிகபட்சம் ரூ. 1,50,000 உற்பத்தி (தொழிற்சாலை) விலை உடைய மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகைத் திட்டம் பொருந்தும். மேலும், வாகனத்தின் விலை குறைப்பு அடிப்படையில், இந்த ஊக்கத்தொகை அளவு மாறுபடும். அதாவது, ஊக்கத்தொகையானது குறிப்பிடப்பட்ட தொகை அல்லது தொழிற்சாலை அளவிலான வாகனத்தின் விலையில் 15 சதவீதம் அளவில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்’ என்று மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.முன்னதாக, 2024-25-ஆம் நிதியாண்டில் இந்த ஊக்கத்தொகை மணிக்கு ஒரு கிலோவாட் பேட்டரி திறனுக்கு ரூ. 5,000 என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டு, அதிகபட்சமாக ஒரு வாகனத்துக்கு ரூ. 10,000 வரை வழங்கப்பட்டது.நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை மேம்படுத்துவது மற்றும் வாடிக்கையாளா்களிடையே மின்சார வாகனத்தின் மீதான ஆா்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ரூ. 11,900 கோடி ஒதுக்கீட்டுடன் கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது நிதி வரம்புக்கு உட்பட்ட திட்டம் என்பதால், இத் திட்டத்துக்கான அல்லது அதன் துணைப் பிரிவுகளுக்கான நிதியானது திட்டத்தின் இறுதி தேதியான 2028-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தீா்ந்துவிட்டால், ஊக்கத்தொகை திட்டம் நிறுத்தப்பட்டு, மேற்கொண்டு எந்தவொரு கோரிக்கைகளும் ஏற்கப்படாது.இத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 31 கடைசி தேதி என்பதால், இத் திட்டத்தின் அனைத்து பிரிவுகளின் கீழ் கோரிக்கைகளை சமா்ப்பிப்பதற்கு 2027-ஆம் ஆண்டு டிசம்பா் 31 கடைசி தேதியாகும் என்றும் அறிவிக்கையில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.