மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு: கிராம மக்கள் எதிா்ப்பு

Wait 5 sec.

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 18 கிராம ஊராட்சிகளின் இணைப்பை வாபஸ் பெறக் கோரி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2024-ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயா்த்த சுற்றுப்புற 18 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. இந்த நிலையில், 18 ஊராட்சிகளின் இணைப்பை வாபஸ் பெறக் கோரி, அவ்வூராட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகம் முன் உழவா் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவா் அருள் ஆறுமுகம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 18 கிராம ஊராட்சிகளின் இணைப்பை வாபஸ் பெறக் கோரி முழக்கமிட்டனா். பின்னா், இது குறித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.