வடகொரியாவில் கொளுத்தும் வெய்யில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஊடகம் ஒரு புதிய சமையல் குறிப்பை வெளியிட்டு, வெய்யிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.கொரிய தீபகற்பம் முழுவதும் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முடியாமல் தென்கொரிய மற்றும் வட கொரிய மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில்தான் வட கொரிய அரசு ஊடகங்கள், நாயிறச்சி சூப் முதல் கோழி இறைச்சிச் சாறு வரை அனைத்தையும் உண்டு, கோடையை சமாளிப்பதற்கான வழிகளாகப் பரிந்துரைத்து வருகின்றன.மற்றொரு பக்கம் வட கொரிய மக்கள் அனுபவித்து வரும் கொடுமையான வெப்பத்தில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் தனது மக்களுடன் இணைந்து கடுமையான சூழல்களை எதிர்கொள்ளும் ஒரு தலைவராகவும் விளம்பரங்கள் அந்த ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.வடகொரியாவில் தற்போது 98 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்நாட்டின் அதிகபட்ச வெப்ப அளவாக இது கருதப்படுகிறது.இதனால், இரவு நேரங்கள் கொடுமையானதாக இருக்கிறது. மக்கள் கடும் வெப்பத்தை எப்படி சமாளிப்பது என கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், நாயிறைச்சி சூப் குடிக்க அரசு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.அதாவது, மருத்துவ இதழ் ஒன்றில், அந்நாட்டின் பொது மருத்துவமனை மருத்துவர் ஒருவர், உடலின் சூட்டைத் தணிக்கும் வகையில், தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறிகளுடன் நாயிறைச்சி சூப், மீன் சூப் போன்றவற்றை மக்கள் எடுத்துக் கொள்ள பரிந்துரைத்திருப்பதாக கட்டுரை வெளியாகியிருக்கிறது.அந்த கட்டுரையில், நாயிறைச்சி சூப் என்பது, நாட்டின் வெப்பக் கால பாரம்பரிய உணவு என்றும், அதனை மெய்ப்பிக்கும் வகையில், கோடைக்காலத்தின் கடும் வெப்பமான நாள்களில், நாயிறைச்சி சூப் உங்கள் பாதத்தின் மேல் சிந்தினால் கூட, அது மருந்தாகவே மாறுகிறது என்று ஒரு பழமொழி இருப்பதாக வெளியிட்டு ஆச்சரியத்தைக் கிளப்பியிருக்கிறது.இந்த ஆண்டு தொடக்கத்தில் நாயிறைச்சியால் சமைத்து அசத்தும் போட்டி நடத்தப்பட்டதையும் விளக்கியிருக்கிறது.இதனை அந்நாட்டு மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியாகி உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.