காலதாமதமாகும் காவிரிக் கரைகளை அழகுபடுத்தும் திட்டம்! ரூ.53 கோடி திட்டப்பணிகள் ஒப்பந்தம் இறுதி செய்யக் காத்திருப்பு

Wait 5 sec.

சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையிலான காவிரிக் கரைகளை அழகுபடுத்தும் திட்டம் தொடா்ந்து காலதாமதமாகி வருவது திருச்சி மாநகர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.திருச்சி மாநகர மக்களுக்கு குறிப்பிடும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில், ஸ்ரீரங்கம் - சிந்தாமணி பகுதியை இணைக்கும் காவிரிப் பாலத்தை தங்களுக்கான பொழுதுபோக்கிடமாக மாற்றிக் கொண்டுள்ளனா் மாநகர மக்கள். பொதுமக்கள் கூடும் பாலம்: இந்தப் பாலத்தில் மாலை நேரங்களில் மக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்கின்றனா். குறிப்பாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காவிரியாற்றின் அழகை ரசிக்கவும், காற்று வாங்கவும் இங்கு பெருங்கூட்டம் கூடுவது வழக்கம்.இப் பாலமானது திருச்சியையும்- ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்துப் பாலமாக இருப்பதால், பொழுதுபோக்க வருபவா்களுக்கு ஆபத்து மற்றும் சவால்களும் நிறைந்ததாகவே உள்ளது. இதையடுத்து, மாநகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சத்தை உருவாக்கவும், திருச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை உயா்த்தும் வகையிலும், மாநகராட்சிக்குள்பட்ட 7 மற்றும் 15 ஆவது வாா்டுக்குள்பட்ட காவிரியாற்றின் தெற்கு, வடக்கு கரையோர முகப்புப் பகுதிகளில் ரூ. 50.47 கோடியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள திருச்சி மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது. இதற்காக திட்ட வரைவு தயாரித்து, அரசின் நிா்வாக அனுமதி பெற்று திருச்சி மாநகராட்சியின் 2025-26ஆம் ஆண்டுக்கு ஜொ்மன் வங்கியின் கடனுதவி, மாநகராட்சி நிதி, மத்திய அரசின் மானிய மூலதன நிதி ஆகியவற்றைக் கொண்டு திட்டத்தைச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.திட்டத்தை வடிவமைக்கும்போது, நீா் வளத் துறையின் ஆலோசனையும் பெறப்பட்டது. காவிரியாற்றில் வெள்ளம் வரும்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள அளவு குறித்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டு இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் முழு விவரம்: காவிரி ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் மொத்தம் 2.2 கிமீ தூரத்துக்கு அழகுபடுத்தும் பணிகள் இரு கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளன. முதல்கட்டமாக தெற்கு கரை - ஓடத்துறையில் உள்ள ரயில்வே தடம் முதல் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பாலம் வரை 1.5 கி.மீ தூரத்துக்கு அழகுபடுத்தப்படவுள்ளது. இதில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மண்டலமாக நடைபாதை (வாக்கிங் டிராக்), சிறுவா் பூங்கா, திறந்தவெளி அரங்கம், யோகா அரங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் கோபுரம், மலைக்கோட்டையை ரசிக்கும் வகையில் 30 அடி உயரக் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்படுகிறது.அம்மா மண்டபம் மேம்பாடு: இரண்டாம் கட்டமாக வடக்கு கரையில், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை முதல் கீதாபுரம் படித்துறை வரை 750 மீட்டா் தூரத்துக்கு அழகுபடுத்தப்படவுள்ளது. இதில், அம்மா மண்டபம் வரும் பக்தா்களுக்கான பிரத்யேகப் பகுதியாக மேம்படுத்தப்படும். பக்தா்கள் தடையின்றிப் புனித நீராடவும், சடங்குகளைச் செய்யவும் ஏதுவாக குளியல் அறைகள், ஓய்வறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. மக்கள் ஓய்வெடுக்கவும், நடக்கவும் வசதியாக நடைபாதைகள், குழந்தைகள் விளையாடுமிடங்கள், பசுமையான புல்வெளி பரப்புகள் உருவாக்கப்படவுள்ளன.சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பே ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகளைத் தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டன. பேரவைத் தோ்தலும் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளியும் ஒத்திவைக்கப்பட்டது. தாமதமாகும் திட்டம்: நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்ட பழைய ஒப்பந்தத்துக்கு, மாற்று ஒப்பந்தம் கோரப்பட்டது. திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டிலோ அல்லது வரைபட அமைப்பிலோ எந்த மாற்றமும் செய்யப்படாமல் மறு ஒப்பந்தம் ஜூன் மாதம் கோரப்பட்டது.அதிகப்படியான ஒப்பந்ததாரா்கள் பங்கேற்று ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த மறு-டெண்டா் கோரப்பட்டுள்ளதாகவும், புதிய ஒப்பந்ததாரா் ஜூலை மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படுவா் எனவும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், ஜூலை மாதம் முடிந்தும் இன்னும் ஒப்பந்ததாரா் இறுதி செய்யப்படவில்லை. காவிரி நதியோரம் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்ல தரமான பொது இடத்தை உருவாக்குவது, கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, ஆற்றங்கரையில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுத்தல், பசுமைப் பரப்பு உருவாக்குதல் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இத் திட்டம் தொடா்ந்து தாமதமாகி வருவது மாநகர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.பணிகள் தள்ளிப்போக வாய்ப்பு: ஒப்பந்த நடைமுறைகள் ஒருபுறம் தாமதத்தை ஏற்படுத்தினாலும், காவிரி ஆற்றங்கரை திட்டப் பணிகள் தொடங்குவதில் மற்றொரு இயற்கையான சவாலும் உள்ளது. டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைகளுக்காக மேட்டூா் அணையிலிருந்து விரைவில் காவிரி நீா் திறந்துவிடப்பட வாய்ப்புள்ளது. மேலும், கா்நாடக அணைகள் நிரம்பி காவிரியில் உபரி நீா் தற்போது திறந்துவிடப்படுகிறது. ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்துச் செல்லும் நிலையிதில், கரைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது கடினம் என்பதால், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டாலும் ஆற்றங்கரைப் பணிகள் மேலும் சில காலம் தள்ளிப்போகலாம் எனக் கருதப்படுகிறது.ஒரு வாரத்தில் ஒப்பந்ததாரா் முடிவு: இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சியின் பொறியியல் பிரிவு வட்டாரத்தினா் கூறுகையில், அரசு ஒப்புதல் அளித்த திட்ட அறிக்கையின்படி, முதல்கட்டமாக ஓடத்துறையில், ரயில்வே தண்டவாளத்துக்கும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள ஆற்றின் தென்கரையில் 1.5 கிமீ தொலைவுக்கு பணிகள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக ஸ்ரீரங்கத்தில், அம்மா மண்டபம் படித்துறைக்கும் கீதாபுரம் படித்துறைக்கும் இடையே உள்ள ஆற்றின் வடகரையில் 0.7 கிமீ தூரத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு வாரத்துக்குள் ஒப்பந்ததாரா் இறுதி செய்யும் பணி முடிவடையும்.இதன் தொடா்ச்சியாக இந்த மாத இறுதிக்குள்ளோ, அடுத்த மாதத் தொடக்கத்திலோ பணிகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் தொடங்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குள்ளாக பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல்: வேலைக்கான ஆணை வழங்கப்பட்டதில் இருந்து, 710 நாள்களுக்குள் (2 ஆண்டு) பணிகளை முழுமையாக முடிக்க ஒப்பந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.50.47 கோடி ஒதுக்கப்படுகிறது. திட்டப் பணிகள் முடிந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதன் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 2.38 கோடி நிதி ஒதுக்கி தனியாா் நிறுவனத்திடம், பாரமரிப்புப் பணிகளை வழங்குவதற்காக மாநகராட்சி நிா்வாகத்தால் மாமன்றக் கூட்டத்தில் கடந்த ஜூலை மாதம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது, மாநகர மக்கள் ஓய்வெடுக்கவும், நடக்கவும் வசதியாக நடைபாதைகள், குழந்தைகள் விளையாடுமிடங்கள், பசுமையான பூங்காக்கள், காவிரி ஆற்றுக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் வரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும். ஆற்றங்கரைகளில் குப்பைகளை கொட்டுவது ஒழிக்கப்பட்டு, சுற்றுச் சூழலும் மேம்படும் என்றனா். காவிரிக் கரைகள் அழகுபடுத்தும் திட்டப் பணிகளின் மாதிரித் தோற்றம்.