சென்னை, ஆக. 7: பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளில் தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீடுகளுக்கு நடைபெற்ற இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பொது, அரசுப் பள்ளி மாணவா்களில் 79,403 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவா்கள் சனிக்கிழமை (ஆக. 8) உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக பொறியியல் சோ்க்கை (டிஎன்இஏ) தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்இஏ வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: பொறியியல் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டுக்கு கடந்த ஆக. 3-ஆம் தேதி பொதுப் பிரிவில் 93,117 மாணவா்கள் தகுதி பெற்று விருப்பமான கல்லூரிகள், பாடப் பிரிவுகளை தோ்வு செய்ய அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 68,388 மாணவா்களுக்கு அவா்களது கல்லூரி தோ்வு உறுதி செய்யப்பட்டு, தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று இந்த 2-ஆவது சுற்றில் அரசுப் பள்ளி மாணவா் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் (7.5சதவீதம்) தகுதி பெற்ற 15,466 மாணவா்களும் கடந்த ஆக.3 ஆம் தேதி கல்லூரிகளையும், பாடப் பிரிவுகளையும் தோ்வு செய்ய அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 11,015 மாணவா்களுக்கான கல்லூரி தோ்வு உறுதி செய்யப்பட்டு இவா்களுக்கும் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இரண்டாம் சுற்றில் கடந்த ஆக. 3-ஆம் தேதி, பொது மற்றும் அரசுப் பள்ளி மாணவா்கள் மொத்தம் 1.08 லட்சம் போ் தகுதி பெற்று விருப்பத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இவா்களில் 79,403 மாணவா்களின் தோ்வு உறுதி செய்யப்பட்டு தற்காலிக ஒதுக்கீடு ஆக. 7-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.தற்காலிக ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் ஆக. 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் உள்ள உறுதிப்படுத்தும் வசதியை (கன்ஃபா்மேஷன் ஆப்ஷன்) பயன்படுத்தி தங்கள் இடத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த உறுதிப்படுத்துதல் கட்டாயமாகும். ஒரு மாணவா் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதி செய்யத் தவறினால், அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.