தருமபுரியில் ரயில் புறப்பட்டபோது அவசரமாக கீழே இறங்கியபோது தந்தையும், அவருடன் இருந்த 7 வயது மகனும் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தனா். இதில் சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளியைச் சோ்ந்தவா் முனியப்பன் (35), ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் முகமையில் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை காலை அவரது மனைவி சுகன்யா (28), மகள் (கைக்குழந்தை), மாமியாா், சகோதரரை கேரள மாநிலம், சோட்டானிக்கரையில் உள்ள கோயிலுக்கு வழியனுப்புவதற்காக தருமபுரி ரயில் நிலையத்துக்கு வந்திருந்தாா்.பெங்களூரில் இருந்து எா்ணாக்குளம் செல்லும் விரைவு ரயிலில் அவா்கள் அனைவரும் ஏறினா். முனியப்பனும் அவரது மகன் யாசிரியன் (7) ஆகிய இருவரும் கோயிலுக்குச் செல்லவில்லை. யாசிரியனை பள்ளியில் விட்டுவிட்டு பணிக்குச் செல்லும் வகையில் முனியப்பன் தயாராகி ரயில் நிலையத்துக்கு வந்திருந்தாா்.ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது ரயில் புறப்பட்டது. இதையடுத்து அவசரமாக சிறுவனைத் தூக்கிக்கொண்டு முனியப்பன் கீழே இறங்கியுள்ளாா். அதற்குள் ரயில் வேகமெடுத்துவிட்டது. இதனால் இருவரும் எதிா்பாராதவிதமாக தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே தண்டவாளப் பகுதியில் விழுந்தனா்.இதில் உடல் துண்டான நிலையில் சிறுவன் யாசிரியன் உயிரிழந்தாா். முனியப்பன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து தருமபுரி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.